Thursday, February 3, 2011

கா.தலைவி - 4 (பிறந்த மண் )

பிறந்த மண்ணில்
கால் பதித்தேன்
பறந்து வந்தது
பொட்டல் மண்

இத்தனை வருடம்
கடந்தப் பின்னும்
இன்னும் மாறாத
மண் பாதை

என் சேலையை
அலை கழித்த 
காற்றின் 
கிராமத்து குசும்பு

வெட்கப் பட்டு
தலை குனிந்தேன்
அவன் விழிகள் 
தொடர்வதாக எண்ணி

ஒரு சில
ஓட்டு வீடுகள்
மாடி கட்டிடமாக
மாறி இருந்தன

சிறு சிறு
விவசாய சறுக்கல்கள்
தரிசு நிலங்களை
விரிவு படுத்தியிருந்தன

நீர் இறைக்கும்
இயந்திரம்
நெல்லுக்கும் கரும்புக்கும்
வலு ஊட்டியது

நிறைய
பொருள் இல்லாதோர்
நிலங்களில்
சவுக்கு மரங்கள்

கைபேசியின் சிணுங்கல்
கணக்கின்றி ஒலித்தன
காணாமலே மலர்ந்த
காதல் அதிசயங்கள்

பள்ளிக்கு செல்லும்
சின்ன குழந்தைகள்
வேலைக்கு செல்லும்
கன்னிப் பெண்கள்

ஊர் சுற்றி
ஓயாத இளந்தாரிகள்
தெரு திண்ணை
மறக்காத பெரிசுகள்

மக்கள் வழக்கங்களில்
மாற்றம் தெரிந்தாலும்
கிராம வளர்ச்சி
பெரிதாக இல்லை

படித்தவர்கள் 
வேலை தேடியும்
படிக்காதவர்கள்
மூட்டை தூக்கவும்

பட்டணம் வந்து
போவதை
பழக்கமாக மாற்றி
கொண்டார்கள்

முன்னோர்களின்
முழு நீள
நினைவகம் தான்
இன்றைய கிராமம்

முடியாதவர்களின்
விட முடியாத
வேதனை தான்
விவசாய மிச்சம்

பெற்ற மகனை
கற்ற கல்விக்கே
தானம் தர
நிர்பந்திக்க படுபவன்
விவசாயி மட்டுமே !

No comments:

Post a Comment