Tuesday, June 28, 2011

எந்தையே - 22

விலை உயர்ந்த 
காலணியை
விட்டு பிரிந்த 
வெயில் காலம்

பொட்டல் வெளியில்
நடந்து சென்றால்
பொடி சுடாமலிருக்க
அன்னை கொடுத்தாள்

தந்தையின் காலனி
எந்த சேதமும்
இல்லாமல்
எடுத்துவா என்று 

கற்களை கடந்தேன் 
முற்களில் நடந்தேன்
உச்சி வெயிலும்
ஒன்றும் செய்யவில்லை 

உழைத்து உழைத்து
ஓடாகி
உறுதி குலைந்த
இறுதி காலத்திலும்

உன்னை போல்
என்னை காத்திட
நினைக்கும்
உன்னுடைய செருப்பு

அனுமதி இன்றி
பண்டம் மாற்றினாய்
என்
அறுந்த காலனியை

சிறந்ததொரு
புது காலனியை
தேர்வு செய்து
தந்து விட்டு

ஒரு முறைக்கு
இரு முறை
ஒட்டு போட்டு
அணிந்து கொண்டாய்

ஒவ்வொரு முறை
காலணி மாற்றம் 
நிகழ்ந்த பொழுதும்  
உள்ளம் நெகிழ்ந்தேன்
  
என்னை
செருப்புக்காக அல்ல
உன்
சிறப்புக்காக பெற்றதால்

என்
வருமானத்திற்கு பின்
உன்
அடி வருடினேன்

உன்னால்
புனர் வாழ்வு
பெற்ற
அறுந்த செருப்புகளால்

இடம் கொடுத்து
உடன்
வைத்து கொண்ட
ஒருவன்

தந்தை அன்பில்
வந்து பார்த்த
உன்னை
தரம் தாழ்த்தி  

புத்தி கெட்டு
உளறியதில்
புண் பட்டு 
பிரிந்து சென்றாய்

அடிக்கடி வந்து
உன்
அடி வருடும்
அனுமதி தராததால்

என்
அறுந்து போன
செருப்புகள்
சோர்ந்து கிடந்தன   

விரக்தி நாட்கள்
வழங்கிய
விலை குறைந்த 
செருப்பு


இறுதி நாட்களில்
உன்னை
ஏந்தி செல்லும்
பெருமை பெற்றது  

ஆறு மணிநேர
இடைவெளி
அரை மணிநேர
நடைபயணம்

உன் செருப்பை
நான் அணியும்
சிறப்பை 
பெற்று தந்தது

இராமனின் காலணி
பரதனின்
தலையை அலங்கரித்தது
புராணம்

தந்தையின் காலணி
மகனின்
காலை அலங்கரிப்பது
கிரீடம் !

Sunday, June 19, 2011

எந்தையே - 21

உன்
மனைவியின் தயவில்
மனைக்கு
மனு போட்டு

உருகி உருகி
உள்ளே நுழைந்த
ஊர்
நீர்த்தேக்க தொட்டி

உன்னை
வெளியேற்றி விட்டு
இன்னும்
இருக்கிறது ஒட்டகமாக  

கருவறை மறக்காத
கத்துக் குட்டி
முதல்
கல்லறை அழைக்கும்
கிழக் கட்டைகள்
வரை

காண்போரிடம் எல்லாம்
நீ
தவறிழைத்தாய் என்று
சொல்ல

காது பட
நண்பன் கேட்டான்
என்ன
தவறு என்று

உன் 
இறப்பிற்கு பின்னும் 
இன்னும் 
இறுமாப்பாய் நிற்கும்

நீர்த்தேக்க தொட்டி 
தான் 
சொல்ல வேண்டும் 
என்ன குறை 
உன்னிடம் கண்டதென்று
 
அண்ணன் 
அறியாத சிறுவனாக 
இருந்த பொழுது 
ஊர் தண்ணியில் 
நஞ்சு ஊற்றியதாய்
பொய் உரைத்தனர் 

ஊர் கண் 
பார்த்திருக்கும் 
அதை 
அவன் கண் 
பழுதடைந்தது 
யார் வதை 

நியாயம் கேட்டு 
நீதி மன்றம் 
படி ஏறினாய் 
அநியாயமாய் 
உன்னை 
மிரட்டிப் பார்த்தனர்
 
என் ஆசை 
மிதி வண்டியை 
நான் காண 
பறித்துச் சென்றனர் 

ஊருக்கு நீருற்றிய 
பாவம் தீர்க்க 
வழக்கறிங்கருக்கு
பால் ஊற்றினாய் 

ஒரு ஊருக்காக 
ஒரு குடும்பம் 
பலியிடப் பட்டது 
நீதி தேவதைக்கு 

மனமுடைந்து 
மனைவியோடும் 
மக்களோடும் 
அன்றே 
மாண்டு போக
தோன்றிய துணிவை

அன்னை
ஆறுதல் சொல்லி
தேற்ற பணிந்ததால் 
உன்னை மட்டும்
இழந்தோம் இன்று  

தமக்கை சொன்னாள்
தண்ணீர் தொட்டி
அருகில்
உனக்கொரு சமாதி
அமைத்திருக்கலாம்
என்று

நான் நினைக்கிறேன்
நீர்த்தேக்க தொட்டி
பார்க்க
உனக்கொரு கோவில்
கட்ட வேண்டும்
என்று ! 

Saturday, June 18, 2011

எந்தையே - 20

எங்கோ 
ஆந்தை அலறுகிறது 
கூட்டான் கூவுகிறது   

இது 
ஆவி நடமாடும் 
நேரம் என்கிறார்கள் 

அவர்களிடம் 
கேட்க தோணுகிறது
என் தந்தையை 
பார்க்க முடியுமா 
என்று      

அன்று 
என் தந்தை 
உள்ளே போ
என்றார்

இன்று
நான் 
வெளியே சென்று
பார்க்கிறேன்

இருட்டில்
அவர்
எங்கு இருக்கிறார்
என்று 

அவர்
சொல்லி தந்த
ஆவி பாடம்
அவராலேயே
உடைக்கப்பட்டு விட்டது   

கருமையான
இருள்
வெறுமையான
வானம்

வெள்ளை ஆடையுடன் 
மேகம்
கொலுசு சத்தமிடும்
வண்டுகள்

காற்றில் ஆடும்
மரங்கள்
கதவை தட்டும்
காற்று

குறி சொல்லும்
கோடாங்கியின்
நடு நீசி
நடமாட்டம்

எல்லாம் இருக்கிறது
உலகில்
இல்லாதவர்கள்
வருவதற்கான அறிகுறிகள்

கைபேசியில்
குரல் கேட்டே
குறை அறியும்
என் தந்தை

கண்ணீர் விட்டு
அழுதும் 
ஆறுதல் சொல்ல
வரவில்லையே    

இருக்கும் போது
இறந்ததாக காட்டிய
கனவு
இறந்தப் பின்
இருப்பதாக காட்டுகிறது     

இருப்பவர்கள்
இரைப்பை பசிக்காக
கூறும்
பொருளற்ற பொய்கள்

இறந்து போன
என் தந்தையை
ஒரு முறை
காண உதவாதா !

எந்தையே - 19

மவுனமாக நிற்கின்றன  
உன் 
மனையின் 
மரம் மட்டைகள் 

மரமாக இருக்கின்றன 
உன் 
சொத்தின் 
நிலம் நீட்சிகள் 
 
நூறு முறை 
போரடியிருப்பாய் 
இவைகளை 
காப்பாற்றி பாதுகாக்க 

ஆயிரக் கணக்கில் 
அள்ளி 
இறைத்திருப்பாய் 
அவைகளை 
பிரியாமல் இருக்க 

கல்லு போன்று 
இருக்கின்றன 
இந்த 
காணி நிலங்கள் 

கண்டும் காணமல் 
சிரிக்கின்றன 
அந்த 
வானம் பார்த்து 

என் 
உழவின் கரங்கள் 
ஒட்டவில்லை 
இந்த மண்ணோடு 

உன் 
நெற்றி வியர்வை
நிலத்தில்
தெரிகிறது இரத்தமாக

என் 
பிறந்த உடலை 
தாங்கி
பெருமைப்பட்ட வீடு 

உன் 
இறந்த உடலை 
ஏந்தி
இரங்கல்பட்டு விட்டது   

இடிந்து போனது 
தென்னை மரம் 
மட்டும் தான் 
உன் 
இறப்பிற்கு முன்னே 
விழுந்த இடியில்  

இன்னும் 
தேக்கு நிற்கிறது 
தீர்க்கமாக 
தோப்பு இருக்கிறது 
துறவியாக 

கிணறு கூட
தண்ணீரில் தான்
மிதக்கிறது
கண்ணீர் இன்றி

உன்னை
அசைத்து பார்த்த
இந்த
அசையா சொத்துக்கள்

இன்று
அமைதியாக இருக்கின்றன
உன்
இறப்பை அறிந்தும்

வேலியோர
வேப்பமரம்

சலசலத்தபடி
நிற்கிறது
உன்
சாவின் செய்தியுடன் !

Thursday, June 16, 2011

எந்தையே - 18

நீ 
வாழ்க்கையில் 
வெற்றி 
பெற்றவன் தான் 

நான் 
வாழ்க்கையை 
வென்று 
கொண்டிருப்பதால் 

உன் 
விடா முயற்சியின் 
வெற்றியை 
நான் உணருகிறேன் 

என் 
விழித்திரையின் 
ஈரங்கள் 
உனை நினைவுட்டுவதால் 

நீ 
அனுபவிக்க தவறிய 
இன்பங்கள் - இன்று 
அணிவகுத்து நிற்கின்றன 

நான் 
எண்ணி எண்ணி 
பார்த்துவிட்டு - ஏக்கப் 
பெருமுச்சு  விடுகிறேன்

ஒருவேளை 
உணவில் 
ஒரு உருண்டை 
உனக்கு 
கணிக்கையாகிறது

சிறிது நேரத்தில் 
சத்தமின்றி 
சில எலிகள் 
அதை 
உண்டுவிடுகிறது    

உனக்கு 
படைத்துவிட்டு
காக்கைக்கு 
அன்னமிடுகின்றனர் 

கணக்காக 
வைக்கப்பட்ட 
கைப்பிடி சாதத்தை 
கூட்டத்துடன்  கொரிக்கிறது

மனது
ஆறவில்லை என்றால்
ஒரு
மனிதனுக்கு
விருந்து வைக்கிறார்கள்

பசியாற
உண்டு விட்டு
பதிலுக்கு
நன்றி சொல்லி
பிரிந்து செல்கிறான்  

என்னால் 
உணர முடிகிறது 
நீ 
இறந்து போனதை 

உன்னால்
உண்ண முடியாது
இந்த
அன்ன தானங்களை

நீ
எனக்கு தந்தை
நான்
உனக்கு மகன்

என்னை
நீ அறிவாய்
உன்னை
நான் அறிவேன்

சடங்குகள்
நடத்தும்
சம்பரதாய
பாடங்கள் இவை

கடமைகள்
ஆற்றும்
குழந்தைகள்
செய்யும் இதை

என்
கடவுளே நீ
தினம்
கண்ணில் தான்

உனை
நினைத்து நினைத்து
உருகுவதே
உள்ள களிப்பு

உன்
கனவை நினைவாய்
மாற்றுவதே
எண்ண துணிவு !

Thursday, June 9, 2011

துளிகள் - பிச்சைக்காரன்

உபயோகித்து
ஒதுக்கி தள்ளப்பட்ட
உபயோகமின்றி
உதறி எறியப்பட்ட
உயிருள்ள
மனித குப்பை !

------------- X ------------------------

கண்கள் பார்க்கின்றன
காதுகள் கேட்கின்றன
கைகள் அசைகின்றன
கால்கள் நடக்கின்றன
 
வாய் புலம்புகிறது  
வயிறு பசிக்கிறது    
என்பதால்
எந்திரமாக கூட
விலை போகவில்லை !

------------- X ------------------------

அருகில் வந்து
சிறுநீர் கழிக்க 
கூட
முகம் சுளிக்கிறது

செல்வந்தன் வீட்டு
செல்ல நாயாக 
மாறிட
வரம் வேண்டும் !

------------- X ------------------------ 

புத்தாடை
எடுக்க வேண்டும்
புதிதாக
எறியப்படுகிறது
கந்தல் துணிகள் !

------------- X ------------------------ 

வாடிக்கையாளர்
வழக்கமான நேரத்தில்
உழியர்கள்
நாழிகை கடந்து  

ஒரு வாய்
தேனீர் வேண்டும்
தெரு குப்பைகளில்
எறியப்படுவதில்லை !

------------- X ------------------------

சுத்தப்படுத்தி
கொண்டு
சுமை தூக்குபவர்கள்
கோடி பேர்

சுத்தமின்றி
அழுக்கு
சுமை தாங்கும்
ஒருவன் நான் !

------------- X ------------------------

என்னை
நான்
கவனிப்பது இல்லை
என்
பசியை
கவனிக்காமல்
இருக்க முடிவதில்லை !

------------- X ------------------------

தினமும்
தெருக்களில்
இறப்புக்களின் ஊர்வலம்
இறந்தவர்களில்
ஒருவரது பெயராவது
எனக்கு
மாற்றப்பட்டிருக்கலாம்
அடுத்தவேளை சோற்றுக்கு !

 ------------- X ------------------------ 

மாடுகளை 
கூட 
வேலைக்கு பழக்கும் 
மனிதர்கள் 

மனிதன் 
என்னை மட்டும் 
மறந்து விட்டது 
தலைவிதி !


Tuesday, June 7, 2011

எந்தையே - 17

நீ
இறந்த பின்பு
உணர்ந்து பார்க்கிறேன்  

இருப்பவர்களுக்காக
மட்டுமல்ல
இறப்பவர்களுக்காகவும்
வாழ்பவர்கள்
இருப்பதை

இறந்தும்
வாழ்வதென்றால்
இன்னதென்று
அறிந்து கொண்டேன்

கனவுகளும்
கட்டளையிடும்
நினைவுகளும்
உத்தரவிடும்

வீட்டின்
உத்தரத்தில்
பல்லியின் சத்தம்
உற்று நோக்கப்படும்

வீட்டு
கூரையில்
காக்கையின் கரைதல்
காரணம் ஆக்கப்படும்  

உன் 
பாதம் பட்டு 
உடைந்து போன 
சருகின் சத்தம் 
உரத்து கேட்கும் 

நீ 
பாதி தொட்டு 
விட்டு போன 
வேலையின் மீதி 
வெறித்துப் பார்க்கும் 

கண் கூசும்  
ஒளியில் 
கண் தெரியா 
இருட்டில் 

உருவமில்லா 
காற்றில் 
ஒருவருமில்லா
அறையில் 

ஒரு முறை 
ஊடுருவி 
பார்க்கும் 
என் விழிகள் 

ஒவ்வொரு முறையும் 
ஏமாற்றமடைந்து 
ஓரத்தில் கசியும் 
ஒருதுளி கண்ணீர் 

எங்கோ 
நீ 
இருக்கிறாய் 
என்ற 
நம்பிக்கை 

இங்கே 
நீ 
இருப்பாய் 
என்ற 
நப்பாசை 

என் 
நாட்களை 
கடத்துகிறது 
என் 
வாரங்களை 
கடத்துகிறது 

என் 
வருடங்களை 
கடத்துகிறது 
என் 
வாழ்க்கையை 
கடத்துகிறது 

வாழ்பவர்களால் 
வாடவிடப்படும் 
என் மனம் 
வீழ்ந்துவிட்டாலும்
துளிர்வூட்டப்படும்
உன்னால் 
 
உண்மை 
இதுவென்றால் 
நான் 
இறந்தவர்களுக்காக 
வாழும் வர்க்கம் !

எந்தையே - 16

செல்வத்தில்
பிறந்தவன்
நீ

செல்லமாய்
வளர்ந்தவன்
நீ

ஊரார் சொல்ல
கேட்டவன்
நான் !

துன்பத்தில்
வாழ்ந்தவன்
நீ

துயரத்தில்
வீழ்ந்தவன்
நீ

என் கண்ணார
கண்டவன்
நான் !

அகட விகடம்
அறியாதவன்
நீ

பகடைக் காயாய்
ஆக்கப்பட்டவன்
நீ

இன்றும் அனுபவித்து
அறிகிறேன்
நான் !

முன்னேற
துடித்தவன்
நீ

முட்டுகட்டைகளால்
நொடிந்தவன்
நீ

உன் முயற்சியின்
முதல்படி
நான்  !

தந்தை
என்பவன்
நீ

தாயும்
ஆனவன்
நீ          

உன் அன்பில்
நனைந்தவன்
நான் !

இன்பங்களை
எதிர்பார்த்தவன் 
நீ

இன்னல்களை
எதிர்நோக்கியவன்
நீ  

இன்றும் உணர்கிறேன்
ஏமாற்றங்களை
நான் !

சாமானிய
மனிதன்
நீ

சராசரியாய்
வாழ்ந்தவன்
நீ

உன் சோதனைகளை
சுமக்கிறேன்
நான் !

செதுக்காத
சிற்பம்
நீ

செல்லிலும் உளி
தாங்கியவன்
நீ

உன் சாவில்
உடைந்த
இதயத்தில் உணர்ந்தேன்
நான் !          

Sunday, June 5, 2011

துளிகள் - முதிர்கன்னி

நான் 
வயதுக்கு 
வந்துவிட்டேன் 
உந்தன்
கண்
பார்த்த போதே 

என் 
வயது 
கடந்து விட்டது 
என்னை 
பெண் 
பார்த்த போது !
 
கண்கள் 
பட்டு பட்டு 
கனிந்த பிறகும் 
உன் 
கரங்கள் பட்டு 
நாணம் வருவது 
பெண்மையின் அதிசயம் !
 
கல்லூரி முடிந்ததும் 
கிடைத்தது 
கைப்பை மட்டுமே 
அதில் 
உனக்காக சேர்த்தது
எனக்கான 
அழகு சாதனங்கள் !

சம உரிமை
பெற்று விட்டேன்
உனக்கு
அதிகாரியாய் அமர

சமைந்த பின்னும்  
மறந்து விட்டாய்
என்னை
அருகில் அமர்த்த !

அருகருகே நிற்கிறோம்
அறியாமல்
உரசிக் கொள்கிறோம்
அவரவர்
அலுவல்களில் பிரிகிறோம்  

இருவருக்கும் இடையில்
யார் போட்டது
இந்த
இலட்சுமணக் கோடு  !

கொலை
செய்வது பாவம்
தற்கொலை
செய்வதும் பாவம்

பெண்ணை
சிறை எடுக்கும்
பழக்கத்தை
ஒழித்த சமுதாயம்

என்னை நானே
சிறை படுத்தி
கொள்வதை
ஏளனமாய் ரசிக்கிறது !

என்னை
வழி மறித்து
காதலிக்க
மனு போட்ட
நூறு பேரில்

என்
தந்தையை
இடை மறித்து
பெண் கேட்க
துணிவில்லாதோர்
நூறு பேர் !
 

Saturday, June 4, 2011

சிந்திப்பதை நிறுத்தி விடு

மனதின் வேகம் 
மிகவும் அதிகம் 
மவுனத்தின் சத்தம் 
மின்னலின் அம்சம் 

என்
பயண தளத்தில்
பாதச்சுவடுகள்
பதியும் முன்னே

மனம்
பயணக் களைப்பில்
பாதி உறக்கத்தில்
புலம்பி தள்ளுகிறது

இன்பம்
என்றால்
ஆகாயத்திற்கு மேலே
பறக்கிறது

துன்பம்
என்றால்
அதல பாதாளத்தில்
விழுகிறது

கற்பனை கோடுகளின்
காட்சிகள்
கண்களை மறைக்கும்
உச்சம்

பார்வை நரம்புகள்
அறுந்தாலும்
பார்ப்பதை நிறுத்தாத
கனவுகள்

மிருகங்களோடு
இருந்து கொண்டு
மிருகமாக
இருண்டு கொண்டு

இருந்த
என் காலங்கள்
இறந்த
என் காலங்கள்

சிந்தனையின்
தீர்க்க தரிசனம்
செயலாக்கத்தின்
தேர்ந்த வெற்றி

ஒட்டு மொத்த
இயற்கைக்கும்
ஒரே குடிமகன்
நான் 

இயற்கை தேர்வில்
என்றும்
எனக்கு முதலிடம்
தான்

இன்றும்
ஏழைச் சிந்தனை
இயற்கையை
ஆண்டு விடும்

என்றும்
மனிதனின் அறிவு
மண்ணின்
உயர்ந்த அளவு  

எந்த நியதியும்
ஏற்பதில்லை
மனிதனுக்கு மனிதன்
உயர்ந்தவன் என்று

இயற்கை நீதியில்
இருப்பதில்லை
இவனுக்கு இவன்
சிறந்தவன் என்று

ஒரு மனிதன்
போதும்
உலகின் வளங்களை
ஆள

ஒவ்வொரு மனிதனும்
தோன்றியது
உடல் புணர்ச்சின்
வேலை     

இன்று
ஒருவரை ஒருவர்
வெல்ல நினைப்பது
கொல்ல துணிவது

உள்ள கிளர்ச்சியின்
ஒவ்வாமை
உண்மை புரட்சியின்
அறியாமை 

கடிவாளம்
இருந்தால் போதும்
மனதை
கட்டி விடுவேன்

இயற்கையை
எட்டிப் பார்க்க
கூட
இயலாத எனக்கு

சிந்தனை எதற்கு
எந்த நேரமும்
சிந்திப்பது
யாரை வெல்வதற்கு

நான்
மனிதனாக பிறந்தது
மண்ணை ஆளத்தான்
எந்த
மனிதனையும் அல்ல !

நோய்

தன்னை 
நினைவுபடுத்தும் 
என் உடலின் 
மனப் போராட்டம் 

என்னை 
செயலிழக்கச் செய்யும் 
என் மனதின் 
உடல் போராட்டம் 
 
நான் 
பிரித்துப் பார்க்க 
முடியாத எந்திரம் 
என் உருவம் 

நாள் 
தவறி விட 
கூடாத உழைப்பு 
என் உயிர் 
 
உண்ண உண்ண
பெருகும் வயிறு 
உண்ணாவிட்டால் 
கருகும் அதிசயம் 

குடிக்க குடிக்க 
கொள்ளும் நீர் 
குடிக்காவிட்டால் 
கொல்லும் அதிர்ச்சி 

உடல் சூடும்
ஒரு கேடு 
உடலில் தங்கும்
அதீத நீரும் 
ஒரு சாக்காடு 

சர்க்கரை 
ஒரு வியாதி 
தேக்கரண்டி தாண்டும்
காரம் 
மற்றுமொரு வியாதி       

வயிறு 
பசிக்கிறது 
வாய் 
புசிக்கிறது 

உணவு 
செரிக்கிறது 
உறக்கும்
பிறக்கிறது     

மீண்டும்
பசிக்கிறது 
மீண்டிட
புசிக்கிறது    

எந்திர மனிதனுக்கு 
கூட
இந்த செலவு 
ஆகாது 

மனித எந்திரத்திற்கு 
மட்டுமே 
மாத செலவு 
அதிகம் 

நல்ல இடம் 
வேண்டும் 
நல்ல காலம் 
வேண்டும் 

இருந்தும் 
நல்ல நேரம் 
வேண்டும் 
நல்ல பாம்பு 
கொத்தாதிருக்க 

புல்லிலும் 
போகும் உயிர் 
கல்லிலும் 
கிடைக்கும் மரணம் 

பேருந்தை 
இரும்பில் செய்துவிட்டு 
வேகத்தை 
விதியிடம் விட்டுவிட்டு 
 
பெயருக்கு 
ஒரு அறிவிப்பு 
படியில் பயணம் 
நொடியில் மரணம் 
 
வேறென்ன 
செய்ய முடியும் 
இந்த 
வெட்கம் கெட்ட
உயிரை காக்க 
 
எந்த 
ஆரம்பம் 
எந்த 
முடிவு 

என்னை 
காக்கும் 
எல்லை என்று
தெரியாத வரை !