Monday, February 28, 2011

எந்தையே - 7

நாளை 
நான் வரும் 
உலகிற்கு
நீ சென்றாயென
ஆறுதல் அடைந்தாலும் 

இன்று 
நான் வாழும் 
உலகில் 
நீ இல்லாமல் 
இருப்பதால் வருந்துகிறேன் 

ஆயிரம் 
மரணங்கள் 
எனக்கு 
உணர்த்தியது 
வருத்தத்தை தான் 

உன் 
மரணம் தான் 
எனக்கு 
உணர்த்தியது 
வாழ்க்கையின் அர்த்தத்தை

நேற்று வரை 
நான் 
பிறந்ததை தான் 
பெரிதாக யோசித்தேன் 

இன்று முதல் 
என் 
இறப்பை கூட
இயல்பாக எண்ணுகிறேன்

நிச்சயமாக 
என் பிறப்புக்கும் 
இறப்புக்குமான 
இறை தூதுவன் 
நீ 
ஒருவன் தான்

நீயே 
எதிர் பார்க்காத 
உன் பிரிவு 
உனக்கு மட்டுமல்ல 
எனக்கும் தான் 
மரண அதிர்ச்சி

ஊருக்கெல்லாம் 
தெரிந்தது 
உன் 
உடைந்து போன 
உருவம் 
மட்டும் தான் 

உறவுக்கெல்லாம் 
தெரிந்தது 
உன் 
தளர்ந்து போன 
நடை 
மட்டும் தான் 

எனக்கு
மட்டும் தான் 
உணர்த்தியிருக்கிறாய்
உன் 
கந்தல் கோலத்தின் 
கம்பீரத்தை

என்னிடம் 
மட்டும் தான் 
தந்து சென்றாய் 
உன் 
இலட்சியத்தின் 
எஞ்சிய பகுதியை 

வெறும் 
துன்பத்தை கண்ட 
தந்தை என்றாலும் 
ஒரு 
இன்பத்தையும் தராத 
மகன் என்றாலும் 

உன்னால் 
மட்டும் தான் 
முடியும் 
இறக்கும் போதும் 
எனக்காக அழ !


துளிகள் - 6

கடவுளே கடவுளுக்கு 
எதிரியாவது 
மதவெறியர்களின் 
மனதில் மட்டுமே !









அணு உலைக்கும்
அணு குண்டுக்கும் 
என்ன வேறுபாடோ 
அதுதான் 
மத நெறிக்கும் 
மத வெறிக்கும் 
உள்ள வேறுபாடு !


 






நான்
இரவுகளை விற்று 
பகலில் வாழ 
ஆசைப்படுகிறேன் 
என் 
இளமையை விற்று 
முதுமையை 
காண விரும்புகிறேன் !






 
 
எரிய எரிய 
உருகி 
மறைந்துவிடும் 
மெழுகு அல்ல 
நான்
எரிச்சல் பட்டும்
தேற்றிக் கொண்டு
எரிச்சல் பட 
பழக்கப்பட்டவள்  !









ஒரு வேலை 
சோறு தான் 
தேவை என்றால் 
கூட்டாஞ்சோறு போதும் 

தனிமையை போக்கிட
திரு மணம்
வேண்டும் என்றால்
மணப்பெண் போதும

முதுமையில் உதவிட
மக்கட் செல்வம் 
அவசியம் என்றால் 
குழந்தைகள் போதும்
 
உனக்கு நானும் 
எனக்கு நீயும் 
உதவ வேண்டும் 
என்றால் 
நண்பர்கள் ஆகிடுவோம் 

ஊரும் நாடும் 
உனக்கும் எனக்கும் 
உடன் வர 
வேண்டும் என்றால் 
உறவினர்கள் ஆக்கிடுவோம் 

என்னை 
வென்றிட நீயும் 
உன்னை 
வென்றிட நானும் 
ஏன் நினைக்கிறோம் 

உன் உணவை 
நானும் 
என் உணவை 
நீயும் 
ஏன் உடைமையாக்கி 
உரிமை கொண்டாடுகிறோம் 

நீ 
திரைகடல் அலைந்து 
திரவியம் தேடும் 
திறமை பெற்றவனாக 
இருக்கலாம் 

நான் 
தெருவை சுற்றிவிட்டு 
பொருக்கி தின்னும் 
பொறுப்பு அற்றவனாக
இருக்கலாம் 

என்னை 
அடிமையாக்கி கூலியாக
தரும் பணத்தை 
ஏன்
மனிதனாக்கி வேலையாக 
தரக் கூடாது 

இருவரும் 
ஒரு திண்ணையில் 
தவழ்ந்து 
ஒரு பள்ளியில் 
படித்தவர்கள் மட்டுமல்ல 
 
ஒரே உலகத்தில் 
பிறந்து 
ஒரே மண்ணில் 
இறக்க 
போகிறவர்களும் தான் !
 

Saturday, February 26, 2011

கா.தலைவி - 5 (ஊர் திருவிழா)

ஊர்த் திருவிழா 
ஊரெங்கும் 
உலவ வரும்     
தேர்த் திருவிழா 

கோவில் வாசலில் 
கோலாகலம் 
குடித்தன வாசலில் 
கோலத்தின் களம்
 
புத்தாடைகளில் 
சிலர் 
புன்சிரிப்புடன் 
பலர் 
 
வேலிச் சண்டை 
இல்லை 
வீட்டுச் சண்டை 
இல்லை
 
பயபக்தியோடு 
பக்தர்கள் 
படையலுடன் 
விருந்தோம்பல்

காசு பணமின்றி 
காரியங்கள் 
வலி வருத்தமின்றி 
வேலைகள்
 
உள்ளம் உருகிட 
எல்லோரும் 
ஒருநாள் மனிதர்களாய் 

எண்ணம் குளிர்ந்திட 
அனைவரும் 
ஆண்டவன் அடிமைகளாய் 

வகை வகையான 
வியாபாரிகள் 
சிகை அலங்காரமாய் 
தெரிந்தார்கள் 

வாத்திய கருவிகளின் 
இசை முழக்கம் 
வசீகர முகமாய் 
மலர்ந்திருந்தது 

கருவறை சாமியின் 
சித்தி 
பெற்றதைப் போல 
சிலிர்த்து நின்ற 
கோபுரம் 

கோபுர உச்சிவரை 
மாபெரும் 
உருவம் கொண்டதாய் 
கற்கடவுளின்
உயிர்ச் சிலை  

அணிவகுத்து 
நின்றனர் 
அணியணியாய் 
துணை கொடுத்து 
வந்தனர் 

பெரும் திரளாய் 
கூடினர்
சிறிது சிறிதாய் 
பெரியதொரு மாநாடாய்
மாறினார் 

மந்திர சத்தம் 
முழங்கியது 
மணிகளின் ஓசை 
கேட்டது 

மந்திராலோசனை 
தொடங்கியது 
முதல் மரியாதை 
யாருக்கென்று 

தேவாமிர்தமாய் 
தெய்வ தரிசனம் 
ஆலகால விடமாய்
அதிகார சதிகள்
 
சீவி சிங்கரித்து 
சாமியின் சிலை 
சிலர் ஆசைக்காக 
மூக்கறுக்கப்பட்டது

சற்று 
உற்று நோக்க 
புரிந்தது 
சுற்றி நின்றது 
சாதி சனம் 
மட்டுமே 

எட்டி நின்ற 
சிலர் 
கூடி கூடி 
பேசியது 
அடுத்த வருடம் 
நடத்தும் 
அவர்கள் விழா 
சிறக்க 

சாமி 
தேர் ஏறியது 
பக்தர்கள் 
வடம் பிடித்தனர் 

உலகாளும்
கடவுளுக்கு 
ஊர் சுற்றி 
காட்ட 

ஒருமுறை 
தெரு வாசல் 
அழைத்து 
முறை செய்து 
அனுப்ப
  
ஒற்றுமை 
என்ற பெயரில் 
பெரியதொரு 
வேற்றுமை 
அரங்கேற்றப்பட்டது !

Friday, February 25, 2011

நான் எனும் எமன்

உன்னை 
நான் பிரித்தால் 
வலியில்லை

என்னை 
நீ பிரிந்தால் 
வலிக்கிறது

கொஞ்சம் கூட
இரக்கம் அற்ற 
நெஞ்சம் இது 

கொஞ்சம் நீ 
விலகி சென்றால் 
குமுறுகிறது

நான் என்றால் 
தவறும் 
சரி தான் 

நீ என்றால்
சரியும் 
தவறு தான்  

உன்னை விட 
என்னை 
நான் அதிகமாக
நேசிக்கின்றேனா

உன் 
பிரிவை விட 
என் சுயமரியாதை 
பெரிதாகி போனதா
 
நாம் வாழும் 
உலகில் 
நான் என்பதும் 
பாவம் 
நீ என்பதும் 
பாவம் 

உயிர் வாழும் 
உடலின் 
பசி கூட 
கட்டாயம் 
காமம் கூட
கட்டளை

எங்கிருந்து 
வந்தது ஆசை 
என் மீது 
நான் கொள்ளும் 
பேராசை 

எப்போது 
தோன்றியது தன்னலம் 
என்னையே நான் 
போற்றிக் கொள்ளும் 
சுயநலம் 

என்னை 
உனக்கு பிடிக்கவில்லை 
என்ற வார்த்தையே 
என்னை 
எனக்கு பிடிக்க 
வைத்தது 

நான் 
தவறு செய்பவன்
என்ற குற்றமே 
நீ 
தவறு செய்பவன் 
என்று சாட்சி 
சொன்னது

உன் 
அலட்சியப் பார்வை 
என்னை 
அழகு செய்தது 

உன் 
ஏளனப் பேச்சு 
எனக்கு 
அலங்காரம் சூட்டியது

கடுமையான திட்டுக்கள் 
என்னை 
கேடையம் அணிந்திட 
பணிந்தது 

கொடுமையான அடிகள்
எனக்கு 
கொலைவாள் எடுக்க 
தூண்டியது

என் 
மாறிப் போன 
முகம் கண்டு 
மலைக்காதே 

அது
நீ பூசிய 
கரியில் 
கருத்துப் போனது

நான் 
வெறுக்க 
கற்றுக் கொண்டேன் 
நீ  
ஆரம்பிக்கும் முன் 

இன்னொருவனை 
நொறுக்க 
பழகிக் கொண்டேன் 
அவன் 
பரிதவித்த பின்னும் 

என் 
இரத்தத்தில் ஊறிப்போனது
என் 
வம்சத்தில் கலந்துபோனது 

எனக்கே 
நான் என்பது 
எமனாகி போனது 
என் பிள்ளைக்கு 
தான் என்பது 
தவமாகி போனதால் !

வலியோடு வாழ்க்கை

தோல்வி கண்டு 
பயமில்லை 
வெற்றி கண்டு 
வெட்கமில்லை 

ஒவ்வொரு தோல்வியிலும் 
என்னை 
ஒதுக்கிச் செல்லும் 
உறவுகளுக்காக வருந்துகிறேன் 

ஒருசில வெற்றிகளில் 
உறவுகளை 
மறக்க நினைக்கும் 
உள்ளத்திற்காக அழுகிறேன் 

நான் 
உங்கள் உறவினன் 
என்பது மட்டுமே 
உண்மை 

என் 
வேறு எந்த 
முகவரியும் என்னுடையது 
அல்ல 

சமுதாய கூடாரத்தின்
சாக்கடை 
கழிவு தான் 
நான் 
என்ற அகங்காரம்

நாகரிக கட்டிடத்தின் 
நாற்றமெடுக்கும் 
கழிப்பறை தான் 
தான் 
என்ற அதிகாரம் 

என் உணவு 
என் பசிக்கு 
உதவாமல் 
வேலிகளுக்கு நடுவே 
காலத்திற்கு இரையாகும் 
கொடுமை 

என் இடம் 
என் தூக்கத்திற்கு
இல்லாமல் 
பத்திரங்கள் ஆகி 
பூமிக்கு பாரமாகும் 
மடமை 

நான் 
எந்த நாட்டிற்கும் 
சொந்தமானவன் அல்ல 

நான் 
எந்த வீட்டிற்கும் 
சொத்தானவன் அல்ல 

எனக்கு 
தாய் என்பது 
முதல் வரி 
தந்தை என்பது 
முகவரி 

எங்கள் குடும்பத்திற்கு 
வீடு தேவையில்லை 
எங்கள் வாழ்க்கைக்கு 
நாடு தேவையில்லை 

உண்ண
உணவு வேண்டும் 
உடுத்த 
உடை வேண்டும் 

இருக்க 
இடம் வேண்டும் 
வாழ 
உயிர் வேண்டும்

எப்போது 
இந்த 
நாகரிக கோடுகள் 
என் 
வழித்தடம் மறைத்து 
தேடச் சொன்னது 

யார் 
என்னை 
என்னிலை மறந்து 
தன்
மொழிக் கேட்டு 
நடக்க பணிந்தது

நற்றற்றில் 
நிற்பது போல் 
உணர்கிறேன் 

எதிர்நீச்சல் 
போட வேண்டியது 
கட்டாயம்

சிலர் போடும் 
துடுப்புக்கள் 
என் தலையை 
அடித்துச் செல்கிறது
 
என் 
நீந்தும் கரங்களில் 
மீன் குஞ்சுகளின் 
இரத்தம் பிசுபிசுக்கிறது !

Thursday, February 17, 2011

இயற்கையை விட்டு ஓடாதே

எது தேவை
வாழ்க்கைக்கு
யார் தேவை
வாழ்வதற்கு

கோடிக் கோடியாய்
கொட்டி எழுப்பிய
தொழிலகத்திலும்
உழைப்பாளியாய்
முதலில் நுழைபவன்
படிக்காத பாமரனே

ஆயிரம் சீருடை
தரித்தாலும்
அவன் நாகரிகம்
அறியாதவன்

நூறு நுட்பங்கள்
கற்பித்தாலும்
அவன் அடிப்படையில்
படிப்பறிவற்றவன்

எங்கு
வெற்றி பெற்றாய்
நீ
எப்போது வென்றது
உன் அதிகாரம்

கண்ணாடி
அலுவலகம் வந்ததா
கணிணியில்
வேலை பார்ப்பதா

ஏழ்மையை
விலகி சென்றதா
ஏழையை
அடிமை படுத்தியதா

இறுக முடிய
சொகுசு வாகனத்தில்
தெருவை பார்க்காத
ஒரு பயணம்

உயர எழுப்பிய
பெரிய வீட்டில்
அறையை தாண்டாத
ஒரு வாழ்க்கை

காற்று கூட
அங்கு
கட்டுபாட்டுடன் தான்
வருகிறது

நீர் கூட
அங்கு
வடிகட்டப்பட்டு தான்
வருகிறது

என்ன செய்கிறாய்
நீ
எப்படி பார்கிறாய்
இயற்கையை

காலையும் மாலையும்
கடற்கரை சாலையில்
கால் வலிக்க
நடைப்பயிற்சி செய்கிறாய்

உண்மையில்
உன் நாயுடன்
சேர்த்து
உன் உடம்பையும்
அழைத்து வருகிறாய்

மூடனே
முட்டாளை
அடிமை படுத்துகிறாய்
முடியாதவனை
ஏழையாக்குகிறாய்

இல்லாதவனை
ஏமாற்ற பார்கிறாய்
இயலாதவனை
எட்ட நிறுத்துகிறாய்

நீ
காசு கொடுத்தால்
காற்று குளிராக
வேண்டும்
பணம் செலவழித்தால்
நீர் வெப்பமாக
வேண்டும்

உன் விருப்பத்திற்கு
இயற்கை
இணங்கி வர
வேண்டும்

உயிர் கூட
நீ
சொன்னால் தான்
பிரிந்து செல்ல
வேண்டும்

உன் கழிவுகளை
சுத்தம் செய்ய
கணக்கற்ற ஏழைகளை
அடிமைகளாய் வைத்திருப்பாய்

இது தான்
வெற்றியின் தத்துவம்
என்று
எல்லோருக்கும் பாடம்
நடத்துவாய்

நிறுத்தி விடு
குப்பை மேட்டிற்கு
நடுவில்
கோபுரங்கள் கட்டுவதை

விட்டு விடு
சாக்கடைக்கு மத்தியில்
சந்தனத்தில் குளிப்பதை

எந்த
கணித சூத்திரத்தில்
சாத்தியம் - எட்டு
இலக்க எண்ணில்
இரண்டு இலக்கங்கள்
தனியே வகுபடும்
என்பது

இயற்கை
சீற்றத்திற்கு முன்
ஏழை பணக்காரன்
இருவரும் ஒன்றுதான்

வானம்
இடிப்பதை தடுத்தாலும்
பூமி
வெடித்தால் என்னாவாய்

இனியாவது
உன் அறிவாற்றலை
உனக்கும்
உன் சுற்றத்திற்கும்
சொத்தாக்குவதை நிறுத்து

அது
நிரந்தர தீர்வும்
அல்ல
நிம்மதியான தீர்வும்
அல்ல

ஆயிரம்
எலி வலைகள்
இருந்தால்
ஆலமரம் கூட
அடிசாயும்

நீ
கோடி குடிசைகள்
இருக்க
கோபுரங்கள் கட்டுகிறாய்

ஒருமுறை
திரும்பி பார்
நீ
இயற்கையை விட்டு
எத்தனை தூரம்
ஓடப் பார்கிறாய்
என்பதை !

Tuesday, February 15, 2011

துளிகள் - 5


விந்தை 

உதடுகள் சேராத
காதலுக்கு
உள்ளங்கள் சேர்ந்தன !

அதிர்ச்சி

பேசாமல் பேசும்
உன் மவுனம்
ஒருமுறை கூட
பேசாமல் போனது
நம்
காதலை மட்டுமல்ல
உன்
மறுப்பையும் தான் !


பூ

தினந்தோறும்
கசக்கி எறியப்பட்டாலும்
மனம் தளராமல்
போராடும்
ஊமை காதலன் !


வெறுப்பு 

ஆழமான
உன் விருப்பத்தின்
கோபமான அகராதி !


சிரிப்பு 

இருக்கு என்று
சொல்லி
இல்லை என்று
மறைக்கும்
உன் இயல்பான
சம்மதம் !


குங்குமம்

தொட்டும்
அழிக்க முடியாமல்
தோற்றுப் போகும்
வியர்வை
தொடாமலே
அழித்து விட்டு
வற்றிப் போகும்
கண்ணீர் !


அழகு 

எப்போதும்
உன் கைபையில்
சாதனமாக குடியிருக்கும்
எப்போதாவது
என் கண்ணில்
உன் முகமாக
வந்து செல்லும்   !


காதல் 

உன் மானத்தின்
ஆயுள் காப்பீடு 
என் மனதின்
அன்றாட முதலீடு !

Saturday, February 12, 2011

எந்தையே - 6

காலம்
உன்னை
மறக்கச் செய்யுமோ
காலனுக்கு முன்னே

கவலை
உன்னை
நினைக்க விடாதோ
கண்ணீரில் பங்கெடுத்து

என்
இரத்தத்தில்
எழுதப் பட்டதல்லவா
உன் முகம்

உன்
இரத்ததில்
எழுப்பப் பட்டதல்லவா
என் உயிர்

வந்தவர் கண்ணீர்
அந்த கணம்
சென்றதும் நின்றது

சொந்தங்களின் சோகம்
முப்பதாம் நாள்
காரியத்தில் முடிந்தது

அன்னையின் அழுகை
எங்களின்
முகம் கண்டு
மனதோடு மறைந்தது

அண்ணனின் வருத்தம்
தம்பியின்
நம்பிக்கை தளர்ந்திட
மறுத்து சென்றது

என்
விழிகளில் கூட
அவர்களின்
சுமைகள் தான்

இருந்தும்
எங்கள் எல்லோரின்
சுவரல்லவா
நீ

உன் மீது
வரையப்பட்டது தானே
எங்கள்
வாழ்கை சித்திரம்

இன்று
தன்னந்தனியே நிற்கிறேன்
தோன்றும்
இடம் எல்லாம்
எழுதிப்பார்க்கிறேன்

யார் சொல்வார்
ஆறுதல் எனக்கு
யார் நிரப்புவார்
என் தந்தையின்
இடத்தை

என்
தன்மானத்தின்
முதல் வடிவம்
நீ

என்
தன்னம்பிக்கையின்
முழு வடிவம்
நீ

இன்று
எந்த ஒரு
இலட்சியமும் இல்லை
உன்
எண்ணங்களை தவிர

அன்று
நீ கண்ட
கனவு மட்டும்
என்
வருங்கால வாழ்க்கையாகும் !

கா.தலைவன் - 4 (காத்திருப்பு )

எங்கு சென்றாய்
என்பதை
நான் அறியேன்

என்று வருவாய்
என்றும்
எனக்கு தெரியாது

உனக்காக நான்
தினமும்
உன் வீட்டு
தெருவில் அலைகிறேன்

ஒவ்வொரு பேருந்தையும்
விடாமல்
உற்றுப் பார்த்து
நான் களைக்கிறேன்

விழிகள்
தேடித் தேடி
ஓய்ந்தப் பின்னும்
விலகி செல்ல
மனமின்றி

உன்
பாதம் பட்ட
இடங்களை
கண்டு தவிக்கிறேன்

உன்
பார்வை பட்ட
நேரங்களை
திரும்பி பார்க்கிறேன்

மறுபடி
உன்னை சந்திப்பேனா
இல்லை
கனவாகி விடுமா
என் காதல்

உன்
உடலுக்கு நோவா
நான்
அருகில் இல்லாமல்
நொடிந்து போனாயா

ஒருமுறை
சுருக்கென்றது
உனக்கு
திருமணம் ஏதும்
நடந்திடுமோ

இதயம் வலிக்கிறது
எண்ணும் போதே
இமைகள் நனைகின்றன
என் அனுமதியின்றி

வீணடித்து விட்டேன்
நான் நாட்களை
உன்னை
கண்ட வினாடியே
சொல்லி இருக்க
வேண்டும்
என் காதலை

தன்மானம்
அன்று தடுத்துவிட்டது
அவமானம்
இன்று அரித்தெடுக்கிறது

நீ வருவாய்
என்று சொல்லும்
மனதினிடம்
என் எதிர்காலம்
தருகிறேன்

எனை நினைப்பாய்
என்று எண்ணும்
நம்பிக்கையிடம்
என் நிகழ்காலம்
தருகிறேன்

உனக்காக காத்திருக்கிறேன்
ஒவ்வொரு கணமும்
அடுத்த நாளுக்காக
ஒவ்வொரு நாளும்
அடுத்த கணத்திற்காக

எந்த நொடி
என் விழிகள்
உன்னை காணுமோ
அந்த நொடி
எது என்று
எனக்கு
யார் சொல்வது !

களைகள்

கொலை தொழில்
செய்வதும்
நரமாமிசம் உண்பதும்
ஒன்றுதான்

ஒருவனை கொன்று
வாழ்வதை விட
உன்னையே நீ
உண்டு வாழலாம்

உண்மையில்
உன்னை நீ
தண்டித்துக்
கொள்ள கூட
உரிமையில்லாதவன்

தானே
முளைத்து வரும்
சுயம்பு அல்ல
நீ

வெறும்
காற்றில் வளரும்
பொருள் இல்லை
உடல்

நீ
பிடுங்கி
உண்ண கூட
ஒருவன்
விட்டு கொடுத்திருக்க
வேண்டும்

நீ
திருடி
செல்வதைக் கூட 
ஒருவன்
மறந்து விட்டுருக்க
வேண்டும்

நாம்
எல்லோருமே
ஐம்பூதங்களின்
கலவை தான்

நம்
எல்லோருக்குமே
பிணியும் மூப்பும்
ஒன்று தான்

ஒருவன்
கத்தியை எடுப்பதும்
புத்தியாய் நடப்பதும்
சக்தியின்
வடிவம் தான்

உன் கத்தி
ஒருவனை கொன்று
உன்னை காக்கும்
ஒருவனின் புத்தி
அவனையே கொன்று
உலகத்தை காக்கும்

ஊரையே கொளுத்தி
விட்டு
நீ மட்டும்
சுடுகாட்டில்
வாழ முடியாது

அருகில் இருப்பவனை
அவ்வபோது
சாகடித்து விட்டு
தொலைவில் இருப்பவனின் 
துணை தேடுபவன்
நீ

சிறு சிறு
வாழ்க்கை நெருக்கடிகள்
தான்
உன் கொலைகள்

பெரியதொரு
சமுதாய நெருடல்கள்
தான்
இந்த களைகள் !

Friday, February 11, 2011

விலை கொடு

என்ன
செய்ய நான்
இன்றைய பசிக்கு

கவிதை
எழுத தான்
நினைக்கிறேன்

இருந்தும்
என் வார்த்தைகள்
வாக்கியங்களை தான் 
நிரப்புகிறது
வயிற்றை அல்ல

நல்ல கவிதைகள்
என்ன
விலை போகும்

உள்ள கவலைகளின்
உண்மை
மருந்தென்ன

இவை
விற்பனைக்கு அல்ல
என்றால்
இவன் 
விற்பனைக்கு உள்ளாவான்

பெற்ற குழந்தை
எனக்கு
புகழ் சேர்க்க
ஆசை

பெற்ற வயிறு
தனக்கு
கூழ் கேட்கும்
அவலம்

பாரதியின் பசிக்கு
அவன்
பாடல்கள் கூட
சோறு
போடவில்லை

பாவேந்தர்கள் பலரும்
தங்கள்
பாக்களை மட்டுமே
வறுமையின்றி
வைத்திருந்தனர்

சிந்திப்பவனின்
செல்களுக்கு செயலாற்ற 
நேரம் கிடைப்பதில்லை
செயல்படுபவன்
திசுக்களுக்கு சிந்திப்பதற்கு
காலம் இருப்பதில்லை

சத்திரியனும்
சாணக்கியனும்
ஒருவனாக இருப்பது
சாத்தியமில்லை

இருவரும்
ஒருவராக முயன்றால்
உள்ளத்தின் மவுனம்
உடைந்து போகும்

என் கவிக்கு
இங்கே
என்ன வேலை

எந்த விலை
என் கவியை
ஈடு செய்யும்

கசப்பு
மருந்து தான்
கவிதை படிப்பது

கடினமான
ஒன்று தான்
கருத்தை அறிவது

பொறியியல் படிப்பு
ஊருக்கு மதிப்பு
உள்ளத்தின் கவிதை
யாருக்கு தெரியும்

பொருட்களின் மதிப்பு
வீட்டுக்கு பெருமை
உறக்கம் இழந்தது
யாருக்கு புரியும்

வெறும்
போட்டியை நம்பி
பொறாமையில் ஓடும்
பொய்யர்கள் உலகம்

கற்பனை மறந்து
கனவுகள் துறந்து
காசு தேடும்
கலியுக வாழ்க்கை

இரத்த சொந்தம்
பணத்தில் வருவதில்லை
எந்த பந்தமும்
பணத்தால் நிலைப்பதில்லை

ஒரு கோடி
தோற்று போகும்              
ஒரு வார்த்தையின்
நம்பிக்கையில்

ஒரு வார்த்தை
மீட்டுத் தரும்
ஒரு கோடியின்
தன்னம்பிக்கையை   

போதி மரம்
மட்டுமே
புத்தனின்
இருப்பிடம் அல்ல

சாமி மடம்
மட்டுமே
போதனைகளின்
பூர்விகம் அல்ல

அறிவுரைகளை
கேட்கப் பழகு
அறநெறிகளில்
நடக்கப் பழகு

நிலையில்லாத
பொருட்களில் தேடாதே
நிலையான நிம்மதி
எங்கே என்று

உன்
வயதான அன்னைக்கு
ஒரு வாய்
அன்னமிட்டு
ஆசிகள் பெறு !


Saturday, February 5, 2011

சிநேகிதியே

நிலையில்லை
எனினும் நினைத்தேன்
நம் நட்பு
நிலை பெறுவதற்கு

வலியில்லை
எனினும் உணர்கிறேன்
ஒருசில நொடிகள்
உடைவதைப் போன்று

அறிமுகம் தான்
நம் ஆரம்பம்
புரிதல் தான்
நம் பழக்கம்

மரியாதை தான்
நம் முதல்படி 
மனநிறைவு தான்
நம் அடுத்தகட்டம்

உலகம்
விழித்து கொண்டது
முகத்தை
சுழித்துக் கொண்டது

நிலையை
எடுத்துச் சொன்னோம்
நினைவை
மாற்றச் சொன்னோம் 

எச்சரிக்கை உணர்வோடு
இரண்டாம் கட்டம்
இன்னும் இயல்பாக
இணைந்த நட்பு

எதிரியை போன்று
குற்றம் சுமத்தினோம்
இருந்தும் நிறைவாக
முறுவல் கொண்டோம்

பிடிவாதம் கூட
பிடிக்காத காரணம்
சுயமரியாதை கூட 
நயவஞ்சக சாட்சி

பெரிதாக ஒன்றுமில்லை
பேசுவதை தவிர
புதிதாக ஏதுமில்லை
பழகுவதை தவிர

உண்மை எதுவென்று
உரக்க சொன்னோம்
உள்ளம் நினைப்பதை
மறக்க சொன்னோம்

எண்ணத்தில் வேற்றுமை
எழுந்த பின்பு
கருத்தில் மாற்றங்கள்
கலந்து போயின

தவறேதும்
இல்லை என்றாலும்
தவறேதும்
நிகழக் கூடாதென்று

இறுதியான
பிரிவைப் பற்றி
யோசித்தோம்
உறுதியான
முடிவாய் இருக்க
யாசித்தோம்

மூன்றாம்
மனிதர்களை போல்
மீண்டும்
ஒரு சிநேகம்

மெல்ல
புரிந்தது போல்
உள்ளம்
வலியை உணர்ந்தது

இனி
உலகம் ரசிக்கும்
நம்
உறவை மதிக்கும்

இது
வெறும் தெரிதல்
என்று
எண்ணி தெளியும்

நேற்று வரை
கொண்ட நட்பு
காற்றுடன் கலந்து
மூச்சை அடைக்கிறது

கனவாய் கருகும்
உண்மை சிநேகம்
நினைவில் நிறைந்து
நெஞ்சை உடைக்கிறது !

Thursday, February 3, 2011

கா.தலைவி - 4 (பிறந்த மண் )

பிறந்த மண்ணில்
கால் பதித்தேன்
பறந்து வந்தது
பொட்டல் மண்

இத்தனை வருடம்
கடந்தப் பின்னும்
இன்னும் மாறாத
மண் பாதை

என் சேலையை
அலை கழித்த 
காற்றின் 
கிராமத்து குசும்பு

வெட்கப் பட்டு
தலை குனிந்தேன்
அவன் விழிகள் 
தொடர்வதாக எண்ணி

ஒரு சில
ஓட்டு வீடுகள்
மாடி கட்டிடமாக
மாறி இருந்தன

சிறு சிறு
விவசாய சறுக்கல்கள்
தரிசு நிலங்களை
விரிவு படுத்தியிருந்தன

நீர் இறைக்கும்
இயந்திரம்
நெல்லுக்கும் கரும்புக்கும்
வலு ஊட்டியது

நிறைய
பொருள் இல்லாதோர்
நிலங்களில்
சவுக்கு மரங்கள்

கைபேசியின் சிணுங்கல்
கணக்கின்றி ஒலித்தன
காணாமலே மலர்ந்த
காதல் அதிசயங்கள்

பள்ளிக்கு செல்லும்
சின்ன குழந்தைகள்
வேலைக்கு செல்லும்
கன்னிப் பெண்கள்

ஊர் சுற்றி
ஓயாத இளந்தாரிகள்
தெரு திண்ணை
மறக்காத பெரிசுகள்

மக்கள் வழக்கங்களில்
மாற்றம் தெரிந்தாலும்
கிராம வளர்ச்சி
பெரிதாக இல்லை

படித்தவர்கள் 
வேலை தேடியும்
படிக்காதவர்கள்
மூட்டை தூக்கவும்

பட்டணம் வந்து
போவதை
பழக்கமாக மாற்றி
கொண்டார்கள்

முன்னோர்களின்
முழு நீள
நினைவகம் தான்
இன்றைய கிராமம்

முடியாதவர்களின்
விட முடியாத
வேதனை தான்
விவசாய மிச்சம்

பெற்ற மகனை
கற்ற கல்விக்கே
தானம் தர
நிர்பந்திக்க படுபவன்
விவசாயி மட்டுமே !

நகைத்து விடு

மனமே
நகைத்து விடு
கனவென்று
நினைத்து விடு

முறைத்தால்
சிரித்து விடு
இறுக்கங்கள்
தளர்த்தி விடு

ஒரு 
பூ தான்
நிம்மதி என்று
உன்
புத்திக்கு
சொல்லி விடு

ஒரு
பா தனை
கேள் என்று
உன்
சக்திக்கு
ஆணை இடு

சீறிப் பாயும்
வாகனத்தை
தூக்கி
தூர எறிந்துவிட்டு
சற்று தூரம்
நடந்துப் பார்

ஒட்டு போட்ட
கட்டிடத்தை
விட்டு
வெளியில் வந்து
மர நிழலில்
நின்று பார்

அதிகாலை
எழுவதை பார்
அந்திமாலை
விழுவதைப் பார்

நிலவு
நகர்வதை பார்
நட்சத்திரம்
ஒளிர்வதைப் பார்

காற்றின்
சத்தத்தை கேள்
நீரின்
சலனத்தை பார்

நெருப்பின்
சீற்றத்தை தணி
இருளின் 
தோற்றத்தில் எரி

அவசர முகங்கள்
அலை மோதும்
கூட்டம்
வண்டியின் உறுமல்
வாகன நெரிசல்

தரையில்
கரி பூசி
தார் சாலை

தாய் மண்ணை
மறைத்து விட்டு
மாட மாளிகை

உயர்ந்த கட்டிடத்தில்
சிறு வீடு
பெரிய அலுவலகத்தில்
ஒரு நாற்காலி

அவ்வபோது
வாடகைக்கு
சில வசதிகள்
அன்றாடம்
கட்டணத்திற்கு
பல காரியங்கள்

நடைமுறை
கொடுமைகளை
உடைப்பில் போடு
நாகரிக
அவலங்களை
கிடப்பில் போடு

ஒருமுறை
புன்னகைத்து விடு
பெரும்
கனவு தான்
வாழ்க்கை என்று !

Wednesday, February 2, 2011

துளிகள் - 4


உங்களால் முடியும்
என்றால்
காதலுக்கு தண்டனை
காதலர்களுக்கு கொடுக்காதீர்கள்
அவர்கள்
குழந்தைகளுக்காக
இணைக்கப்பட்டவர்கள்

என் தந்தைக்கு 
நூறு வரன்கள்
அமையும்
என் தாய்க்கும்
நூறு வரன்கள்
அமையும்

ஆனால்
எனக்கு
தாய் தந்தையாக
இந்த
இரண்டு வரன்களே
அமையும் !



கருவில் தானே
கலைந்து போகும்
உயிர்
ஒரு சொட்டு
கண்ணீரைக் கூட
கடன் கேட்பதில்லை

தாயால் கர்ப்பத்தில்
கலைக்கப்படும்
உடல்
ஒரு சிறு
வலியை கூட
உணர்வதில்லை

குழந்தையாகி
இறந்தால்
குடும்பத்தின் துக்கத்தை
எடுத்துச் செல்லும்

சிறுவனாகி
இறந்தால்
உறவினர்களின் கதறலை
பெற்று கொள்ளும் 

இளைஞனாகி
மறைந்தால்
நண்பர்களின்
கண்ணீர் அஞ்சலியும்
கலந்து விடும்

உற்றவனாகி
மறைந்தால்
உடையவள்
உள்ளத்தை
உடைத்துச் செல்வான்

பெற்றவனாகி
பிரிந்தால்
பிள்ளைகள்
தலைஎழுத்தாய்
தங்கி விடுவான்

பெரியவராகி
இறந்தால்
அறுபதை கடந்தவராக
மறைந்தால்
வாழ்க்கையின்
வலிகளை கூட
அழச் செய்திருப்பான்

இவன்
கணக்கை யாரிடம்
தொடர்வது என்று !

வாழ்க்கை ஒரு விளையாட்டு

என்ன
விளையாட்டு இது
என்றும்
ஆடும் வாழ்க்கை

யார் துவக்கம்
யார் முடிவு
நான் எப்போது
இணைந்தேன்

இதை
ஆடும் முறையென்ன
இதற்கு
தேவைப்படும் பொருளென்ன

பணம்
சேர்க்க வேண்டுமா
புகழ்
சேர்க்க வேண்டுமா

பிள்ளைகளை
பெற்றெடுக்க வேண்டுமா
நன்கு
வளர்க்க வேண்டுமா

காதலிக்க
தெரிய வேண்டுமா
காதலியை கைப்பிடிக்க
தெரிய வேண்டுமா

படித்து பட்டம்
பெற வேண்டுமா
பதவியை தட்டிப்
பறிக்க வேண்டுமா

ஊர் சுற்றி
பார்க்க வேண்டுமா
ஓரிடத்தில்
உட்கார்ந்திருக்க வேண்டுமா

பணக்காரனும் வாழ்கிறான்
பிச்சைக்காரனும் வாழ்கிறான்
சன்யாசியும் வாழ்கிறான்
சம்சாரியும் வாழ்கிறான்

ஆணழகனும் வாழ்கிறான்
ஊனமுற்றவனும் வாழ்கிறான்
மானமுள்ளவனும் வாழ்கிறான்
மானமற்றவனும் வாழ்கிறான்

வீரனும் வாழ்கிறான்
கோழையும் வாழ்கிறான்
வென்றவனும் வாழ்கிறான்
தோற்றவனும் வாழ்கிறான்

எல்லோரும் உறவினர்கள்
என்கிறார்கள்
ஒருவருக்கொருவர்
உதவிக் கொள்ள
மறுக்கிறார்கள்

எல்லோரையும் குடும்பமாக 
பிரிக்கிறார்கள்
ஒரு சாரர் 
குடும்பங்களை தனியாக
ஒதுக்கி விடுகிறார்கள்

எது தான்
முடிவென்றால்
மரணம் தான்
என்கிறார்கள்

சரி தான்
செல்லோவெம் என்றால்
உன் வாழ்க்கை
சரியில்லை என்கிறார்கள்

நீதி என்கிறார்கள்
நியாயம் என்கிறார்கள்
சட்டம் என்கிறார்கள்
சிக்கல் என்கிறார்கள்

வெறும்
சதை பிண்டம்
தான் உடல் 
பெரும்
சர்ச்சை பண்டம்
தான் உயிர் 

வேறென்ன
விலங்குக்கும் மனிதனுக்கும்
வேறுபாடு
அறிவு
அறிவு தான்
அனைத்திற்கும் ஆரம்பம்

இன்னும்
எண்ணற்ற கோடி
அறிவிலிகள்
அவர்களையும்
இழுத்து கொண்டு
அறிவாளிகள்

உண்மையில்
திறமைசாலிகளின்
ஆட்டத்திற்குள்
தெரிந்தே
சேர்த்து கொண்டார்கள்
மக்களையும் மாக்களையும்
ஒன்றாக

வெற்றியாளர்களின்
விளையாட்டு சுவாரசியத்திற்கு
பலியாவது
பாமர குடிமக்கள்

நீ மாறு
நீ மாறு
முன்னேறு
முன்னேறு - என்று
சொல்லி சொல்லியே
மனிதனை எந்திரமாய்
மாற்றி விட்டார்கள்

ஆயிரம் மேய்ப்பர்களும்
கோடி
ஆட்டு மந்தைகளும்
மட்டுமே மைதானத்தில் !

Tuesday, February 1, 2011

எந்தையே - 5

குல தெய்வம்
என்று
கும்பிடச் சொன்னாய்

ஒவ்வொரு
வெள்ளிகிழமையும்
விநாயகரை
வழிபடச் சொன்னாய்

புரட்டாசி
மூன்றாம் சனி
திருப்பதி
தரிசனம் காட்டினாய்

பிடிவாதமாய்
பழனி முருகனுக்கு
மொட்டை
போடச் சொன்னாய்

எல்லா
ஞாயிற்று கிழமையும்
இராகுகால பூசையில்
பங்கேற்கச் சொன்னாய்

குரு பெயர்ச்சிக்கு
சிவன் கோவிலை
வலம்
வரச் சொன்னாய்

சனி பெயர்ச்சிக்கு
சனிச்வரனை
வணங்கி
அருள்பெறச் செய்தாய்

ஊர்
மாரியம்மனுக்கு
தீமிதி
திரு விழா

ஒரு
பண்டிகை தவறாமல்
படையல்
வீட்டு சாமிகளுக்கு

சுற்றுலா என்றால்
மதுரை
மீனாட்சி அம்மன்
கோவில்

விரதம் என்றால்
கார்த்திகை
சுவாமி மலை
முருகனுக்கு

நல்ல நேரம்
பார்த்து
நடக்கச் சொன்னாய்

நல்ல சகுனம்
பார்த்து
போகச் சொன்னாய்

கருடனுக்கு கூட
கன்னத்தில் இட்டு
கும்பிடு
போடச் சொன்னாய்

பிறர்மீது கூட
பாதம் பட்டால்
தொட்டு
வணங்கச் சொன்னாய்

உன் காலில்
மட்டும்
ஒரு முறை
கூட
விழச் சொன்னதில்லை

உன் முகம்
கண்டு
ஒரு முறை
கூட
தொழச் சொன்னதில்லை

என் தந்தையே
உனக்காக
நான்
மொட்டை அடித்தேன் 
தெரியுமா

உன் உடல்
முன்னே
நான்
விழுந்து வணங்கியதை
அறிவாயா

இன்று
ஒவ்வொரு அமாவாசையும்
உனக்கென
நான் விரதமிருகிறேன் !