Thursday, July 21, 2011

எந்தையே - 31

நேர்த்தி கடனாக

நீண்ட தாடி - நல்ல

நேரம் தவறாமல்

சிறந்த படையல்


அப்பனே முருகா

என்று

அன்றாடம் வணங்கி

மன்றாடும் விழிப்பு


திருப்பம் தேடி

திருப்பதி தரிசனம்

திருமால் அருளுக்கு

திருமலை ஏற்றம்


பழனி ஆண்டிக்கு

பக்தி மொட்டை

பால முருகனுக்கு

பரவச காவடி


ஆபத்து காத்த

விநாயகர்

அருள் வழங்க

அன்றாடம் பால்


அர்ச்சனை தட்டுடன்

உண்டியல் காணிக்கை

மூன்று முறை

வேண்டுதல் வலம்


வேதனை வந்தும்

சோதனை என்றாய்
விதியால் நொந்தும்
வேலனே என்றாய்

துணைக்கு ஆளின்றி
தெய்வத்தை நாடினாய்
தனிமையில் நின்றபடி
தண்டம் பணிந்தாய்

சிறு பிரிவுகளில்
திருநீறு பூசினாய்
மறக்காமல்
மடித்து கொடுத்தாய்

புது தொடக்கத்தில்
புகைப்படம் வைத்தாய்
பூசை அறையில்
புத்தகத்தை வைத்தாய்

துன்பம்
தீர்ந்திட பூசை
இன்பம்
சேர்ந்திட ஆசை

மகன்
படித்திட கோரிக்கை
வேலை
கிடைத்திட காணிக்கை

பால் தொழிலை
நிறுத்திய பின்னும்
காலை தவறாமல்
கடவுளுக்கு படைத்தாய்

கண்காணாத இடத்தில்
கடமை ஆற்றும்
கடைசி மகனை
கண்ணிமையாய் காத்திட

என்ன செய்தான்
உன் இறைவன்
என்ற கவலை
என்று தோன்றியது

உன் மகன்
தனிமையில் நிற்கிறான்
என்ற நிலைமை
என்று தெரிந்தது

முன்னேற்ற தடைகள்
என்னை
பின்னோக்கி இழுப்பதை
கண்ணால் கண்டாயோ

கடவுளே கடவுளே
என்றாலும்
காரியம் நடக்காததை
அறிந்து கொண்டாயோ

உன்னையே இழந்து
எனக்கு
ஒரு தெய்வம்
ஆகிவிட்ட எந்தையே

இருந்து செய்த
கடன் பெறாமலே
இறந்து செய்ய
புறப்பட்டது ஏன் !

Monday, July 18, 2011

எந்தையே - 30

எந்தையே
என் சிந்தையில்
தோன்றும் பாக்கள்
பிதற்றல் அல்ல

என்றும் 
என்னுடன் இருக்கும்
உனக்கு - நான்
தூவும் பூக்கள்

நண்பன் கூட
கேட்கலாம்
என்ன இலாபம்
என்று 

நான் உனக்கு
மகனாய் பிறந்ததால்
தான்
அவனுக்கு  நண்பனானேன்

நாளை
சுற்றம் வந்து 
சொல்லலாம்
சும்மா இருவென்று

உன்னை  போல்
ஒரு தந்தையாய்
இருக்க
முடியாதவர்கள் 

என்னை போல்
ஒரு மகனை
ஈன்றெடுக்க
நினைக்காதவர்கள்

சுற்றும் உலகம்
சற்றும் சிந்திக்காமல்
புத்தி கெட்டவனென்று
புறம் தள்ளலாம்

சுந்தர தமிழில்
எந்தையின் சாதனைகள்
சந்தங்கள் கலந்து
சிந்தைகள் மயக்கும்

தந்தையும் மகனும்
தத்தமது
தவறுகள் திருத்தி
தியாகத்துடன் நடப்பர்

தன்னால மனிதர்கள் 
தன்னிலை மறந்து
கணப் பொழுது
நினைத்து பார்ப்பார்கள்

ஒவ்வொரு
தந்தைக்கு பின்னும்
ஒரு மகன்
உருவாக காத்திருக்கிறான்

ஒவ்வொரு
மகனின் உழைப்பும் 
ஒரு தந்தையின்
விருப்ப ஓய்வுக்கென்று

நேற்று
வணங்கிய  கடவுள்
இன்று
வணங்காத கடவுள்

என்னை
சோதித்து பார்த்து
தினம்
வேதனை மூட்டலாம்

உன்னை
காப்பாற்றி இருந்தால் 
உண்மையில்
உலகில் இருந்தால்

உணர்ந்து
கொள்ள முடியும்
என் - கவிமாலை
கடவுளுக்கே என்று !

எந்தையே - 29

உன்
இறுதி காலங்கள்
என்னை
இம்சை  செய்கிறது 

உன் 
கந்தல் கோலங்கள்
என்னை
கண்ணீரில் நனைக்கிறது 

என்
சம்பாத்தியத்திற்கு பின்னும்
உனக்கு 
சந்தோசம்  இல்லை

நீ
நிம்மதி அடைந்திடும்
வண்ணம்  -  நான்
தலையெடுக்க  வில்லை

தலை வாரிட
நேரம் இன்றியும்
உடை மாற்றிட
உள்ளம் இன்றியும்

தனி ஒருவனாக
நின்று
தாங்கிய வலிகள்
சாமானியர்கள் சரித்திரம்

பெற்ற பிள்ளைகளின்
வாட்டம் அன்றோ
உன்னை
வாட்டி வதைத்தது

உற்ற சொந்தங்களின்
உதாசீனம் அன்றோ
உன்னை
உருக்குலைத்து விட்டது

முதல்
இரு பொத்தான்கள்
திறந்து கிடக்கும்
மறந்த  கோலம்

மீசையின்
நரை முடிகளை
கடித்து  நிற்கும்
கடந்த  காலம்

கை பேசியை
கழுத்தில்
மாட்டி கொண்டு
மகிழ்ந்த நேரம்

கடிகாரத்தை
கையில்
கட்டிக் கொண்டு
கலக்கிய கம்பீரம்

எப்படியாவது
மீட்டுவிட எண்ணிய 
உன்
இளமைகால இதிகாசம்

சகோதரர்களிடமும்
சமுதாயத்திடமும்
முடித்திட துடித்த
உன் வனவாசம்

இரத்த அழுத்தத்தில்
உணர்ந்து கொண்டேன்
நீ
எத்தனை இன்னல்கள்
சுமந்தவன் என்று

இதயம் வெடித்ததும்
கனன்று நின்றேன்
நான்
இத்தனை சின்னவனாய்
இருந்தேனே என்று

என்றாவது ஒருநாள்
உன்னை
இன்னல் கலைந்த
இன்முகத்துடன் காண

எந்நேரமும் என்னை
சிந்தனையில்
இருத்திக் கொண்டு
சிடுசிடுத்தேன் உன்னிடம்

என்ன
சொல்வதென்று புரியாமல்
உனக்கு
ஒரு துன்பமும்
தரமாட்டேன் என்றாயே

இன்று
உன்னையே இழந்துவிட்டு
இன்னமும்
உன் கடனடைக்க
கண்ணீருடன் பணியாற்றுகிறேன் !

Sunday, July 17, 2011

எந்தையே - 28

ஒரு தந்தைக்கு
ஈடாகாத
பெரிய  உலகம்

எந்தையின் அன்புக்கு
இணை செய்யாத
விந்தை உலகம்

ஒரு நூறு
முறை
சிறுபிள்ளை
போன்று

கல்லூரி
செல்லும் வயதிலும்
கை அசைத்து
வழி அனுப்பினாய் 

ஒரே  ஒரு
முறை
உடன் வந்த
அடுத்த வீட்டுக்காரர்

வாசம் கூட
அறியாத
மதுக்கடை வாசலில்
காக்க வைத்தார்

விரட்டி விரட்டி
அடித்தாய் 
வடக்கு  வயலுக்கு
விளையாட சென்றதற்கு

நெல் வயலில்
வேலை பார்க்கும்
ஆட்களிடம்
வம்பு செய்ததே
விவசாய பாடம்

எலுமிச்சை  மரத்தின்
பழம் உலுக்குவது
பற்றி
எதுவும் தெரியாமல்

பக்கத்து வீட்டுக்காரரை
உதவிக்கு அழைத்தால்
வேலையிருகிறது என்று
விலகி செல்கிறார்

ஒவ்வொரு தந்தைக்கும்
மகனுண்டு
உயிருக்கு உயிராய்
உணர்வுகளை பகிர்ந்திட

அவரவர் வாழ்க்கையிலும்
ஆயிரம்
இன்னல்கள் உண்டு
இடைவிடாமல் உழைத்திட

எனது
வருத்தம் எல்லாம்
இவர்கள்
ஒவ்வொரு முறையும்

உனக்கு
துன்பம் தருகையில்
என்னை
ஏன்  மறந்தார்கள்

குற்ற உணர்வு
சிறிதும் இல்லாத
கொலை செய்யாத
குற்றவாளிகள் இவர்கள்

தகாத வார்த்தைகள்
பேசி
தற்கொலை செய்ய
தூண்டும் கொலைகாரர்கள்

சிறு சிறு
தவறென்று
தண்டனை இல்லாமல்
தலையை  கொய்யும்
தவறான  உறவுக்காரர்கள் 

தந்தையை இழந்த
மகனையும்
விட மாட்டார்கள்
மகனை இழந்த
தந்தையையும்
விட மாட்டார்கள்

தான் வாழ
தன்னை
சுற்றி உள்ளவர்களை
சொந்தமென்று சொல்லி
கொல்லும் களைகள் !

புன்னகை போதும்



புன்னகைத்து விடு
போதும்
பொன் நகை 
தேவையில்லை

கண்ணசைத்து விடு
போதும்
பண் இசைத்திடும் 
புண்பட்ட உள்ளம்

உயிர் வாழ
உழுது கொண்டிருந்த
உலகம்
மாறி விட்டது

வாழ்க்கை உயர
உழைக்க வேண்டிய
நேரம்
வந்து விட்டது

பொழுதுகள் நிறைந்த
பொழுது போக்குகள்
குறைந்த
பெற்றவர்கள் காலம்

சிறுக சிறுக
செல்வம் சேர்த்து
பெரிதாய்
வாழ்ந்த வாழ்க்கை

பொழுதுகள்  குறைந்த
பொழுது  போக்குகள்
நிறைந்த 
பிள்ளைகள் காலம்

வரவை தாண்டி
செலவு  நிற்கும்
சிரமமான
சிக்கன வாழ்க்கை

மோட்டார் வாகனத்தில்
ஊர்வலம் வரும்
அவசரத்தில்
கோயில் பூசாரி

மூடிய கதவை
திறந்து பார்க்க
நேரமின்றி
விடுமுறை ஓய்வு

உறவுகள் துறந்து
ஓடுகிறோம்
இரவுகள் மறந்து
உழைக்கிறோம்

அறிவியல் வளர்ச்சியில்
ஆயிரம் வசதிகள்
இருந்தாலும்
அசதியில் மறக்கிறோம்

அன்னை தந்தையின்
நலம் விசாரிக்க
அண்ணன் தங்கையின்
அன்பை பகிர

மனைவி
மக்களை கூட
துணைக்கு
அழைக்க முடியாத

தூர தேச
வாழ்க்கையில்
தொலைந்து போகும்
கனவுகள்

புதிய புன்னகைகளில்
மதங்களை
மறந்து விட்டு
உறவுகளை நாடுகிறோம்

பெரிய சிரமங்களில்
சடங்குகளை
துறந்து விட்டு
சம்பரதாயங்களை செய்கிறோம்

பொருள் ஆதாரம்
என்னும் பேரலையில்
புதைந்து போனது
பழமையான முறைகள்

மாடு கூட
குடிநீர் குழாயில்
தாகம்
தீர்க்க பழகுகிறது

நாய்  கூட
குட்டையான
வாலை - ஆட்ட
நேரமின்றி பறக்கிறது

ஆடி பண்டிகையில்
மூடிய  உணவகத்தை
அக்கறையுடன் சொன்ன
பெட்டிகடை காரரின்

வாழைப் பழத்தை
விட இனிமையானது
அவர்
வாஞ்சையுடன் சிரித்த
சிரிப்பு !

எந்தையே - 27

உலகம் தெரியாத
ஒரு பிள்ளை
உலகம் அறியாத
சிறு பிள்ளை

இரண்டுக்கும் நடுவில்
உறவுகள் தொல்லை
உடலினை கவனிக்க
இடைவெளி இல்லை

உன்னை கவனிக்க
உன்னிடமே 
கேட்டுக் கொண்ட
பக்தன் நான் 

என்னை நினைத்து 
அனுதினமும்
கவலை பட்ட
கடவுள் நீ

சிறை வாசல்
வரை
சுமந்து சென்றாய்
எங்கள் சிலுவைகளை

உயிர் மூச்சை
கொடுத்து
அவிழ்த்து விட்டாய்
மக்கள் சிக்கல்களை

பெரியதொரு
விருப்பம் இல்லை
பொறியியல்
படிப்பேன் என்று

அரியதொரு
வெற்றியை பெற்றாய்
ஊரின் - முதல் 
பொறியியல் பட்டதாரியாக்கி

ஊழ் வினையாக
எதிரிகள்
செய்வினையாக
கண் போகாவிடில்

இன்னொரு மகனையும்
இமயம்
ஏற்றி இருப்பாய்
என்போல் மாற்றியிருப்பாய்

விதி வலியாதாய்
நின்றது
எதிரிகள் நிறைந்த
உன்  வாழ்வில் 

விடா முயற்சியில் 
வென்றாய்
அன்னை உனக்கு 
துணையாய்  நிற்க

உன்னை யாரும்
தோற்கடிக்க  வில்லை
நீ யாரிடமும்
தோற்றிடவும் இல்லை

இறுதி வரை
உன்னை
விரட்டி வந்தார்கள்
மிரட்டி பார்த்தார்கள்

சிறுதும் அஞ்சாமல்
என்றும்
சிரித்து கொண்டே
சாதித்தவன் நீ

உன்னை சோதித்தவர்கள்
இன்று 
சொல்லிக் கொள்ளலாம்
தோற்கடித்து விட்டதாய்

மண்ணில் வாழும்
மனிதர்களுக்கே
வெற்றி தோல்வி - என்று
அறியாதவர்கள் அவர்கள்

என்னை  பார்த்து
சிலர்
ஏளனமாய் சிரிக்கலாம்
உன்னை இழந்ததால் 

உண்மை என்னவென்றால்
இனி தான்
ஆரம்பம்
என் வாழ்க்கை !

நடந்ததை மறந்துவிடு






மனதின் ஆசைகளை
நியாயப்படுத்த
போராடும்
அறிவின் ஆற்றல்

மூளை செல்களை
சலவை செய்ய
நினைக்கும்
உள்ளத்தின் ஆசை

மனித சமூகத்திடம்
மரியாதை பெற
துடிக்கும்
தன்மான எண்ணங்கள்

மரண தண்டனையை
மாற்றி போட
மன்றாடும்
உண்மை விரும்பிகள்

அநியாயத்திற்கு
அகராதியை அலசுகிறோம்
அநியாயம்  
செய்யவில்லை என்று

நியாயத்தின் 
பக்கங்களை காட்டுகிறோம்
நீதி
தவறியவர்கள்  என்று

சட்டத்தின் விதியை
உடைக்க  கூடுகிறோம்
கட்டுமானம் 
சரியில்லை என்று 

விதிகளை மீறுவதாய்
விளம்பரம் செய்கிறோம்
தீவிரவாத 
தீர்மானம் என்று

நீ
வாழும் நாட்கள்
உனக்கானது

நான்
வாழும் நாட்கள்
எனக்கானது

நாம்
வாழும் நாட்கள்
பொதுவானது

நம்
பிரிவுக்கு பின்னே
வரும் காலம்

நல்ல 
வாழ்க்கையில் தொடரும்
பொற்காலம்

நினைவுகள் என்னும்
நிகழ்வுகளின் 
கனவு பிம்பங்கள்

தற்காப்பிற்காக
தக்க வைக்கப்பட்ட
உயிரியல் தத்துவம்

உளவியல் காரணங்களை
உருபோடாதே
கலவியல் பற்றி
கற்பனை செய்யாதே

நேற்றைய வயதும்
நேற்றைய தினமும்
முடிந்து போன
உண்மை 

முடிந்த நினைவும்
முடிந்த கனவும்
நடக்க முடியாத
நிச்சயம்

உலகிற்கு
விளக்கம்  சொல்ல
அவசியங்கள்
எதுவும் இல்லை

மனதிற்கு 
ஆறுதல் சொல்லும்
முயற்சிகள்
தேவை இல்லை 

ஒவ்வொரு நாளும்
உனக்காக 
உறங்கி விழித்திடு

அன்றாட ஆசைகளை
அலுவலாய்
அனுபவித்து  விட்டு

ஒவ்வொரு நொடியும்
புதிதாய்
சிந்தித்து நடந்திடு

முடிந்த வினாடிக்கு
மவுன  அஞ்சலி 
செலுத்தி விட்டு !

Saturday, July 16, 2011

வெளிச்சத்தின் விழிகளில்


எப்போதும் 
இரண்டாகி போகிறேன் 
வெளிச்சத்தின் விழிகளில்..

இரவுக்கு
மட்டுமே தெரியும்
நான்
யாரென்ற உண்மை

உங்கள்
பார்வை பட்டு
இரண்டாக உடைகிறேன்

நான்
பங்கப்பட்டு
பகுதியாக பிரிகிறேன்

உங்களுக்கான
என்னை
முன்னால் நிறுத்துகிறேன்

நீங்கள்
வெளிச்சத்தின்
பின்னால் நிற்கும்போது

எனக்கான
உங்களை
எனதாக்க எண்ணும்போது

உங்கள்
வெளிச்சத்தை
மறைத்து விடுகிறேன்

வெளிச்சம்
என்னை
உலகுக்கு காட்டுகிறது

இரவு
உண்மையை
எனக்கு காட்டுகிறது

இருவரும்
ஒருவரை ஒருவர்
உருமாற்ற
முயற்சி செய்கிறோம்

இயற்கை
பரிணாமம் இல்லாமல்
நிறம்
ஏற்றி கொள்கிறோம்

உடை
மாற்றி கொள்கிறோம்
உடலை
மறைத்து கொள்ள

நடை
மாற்றி செல்கிறோம்
நாகரிகத்தை
வளர்த்துக் கொள்ள

முடி
திருத்தி கொள்கிறோம்
முகத்தை
மெருகேற்றி கொள்கிறோம்

நகம்
வெட்டி கொள்கிறோம்
நளினமாக
பேசி பழகுகிறோம்

தூசு
படாமல்  இருக்கவும்
தும்மல்
வராமல் இருக்கவும்

நம்மை நாமே
துன்புறுத்தி கொள்கிறோம்
நாளுக்கு நாள்
பன்படுத்தி கொள்கிறோம்

இறுதியில்
இரவில் கூட
ஒருவனாக  முடியாமல்
தோற்று போகிறோம்

எந்நேரமும்
முன்னேற எண்ணி
பின்னோக்கி பார்க்க
மறந்து விடுகிறோம்

எந்தவொரு
பிடிப்பும் இல்லாமால்
விழுந்து கொண்டிருக்கும்
நம் நிழலை
நிஜத்தின் மறுபக்கத்தை !

Friday, July 15, 2011

எந்தையே - 26

முகவரி தொலைந்து
நிற்கிறேன் - உன்
முக  வடிவம்
இழந்து தவிக்கிறேன்

கனவுகள்  கருக
கண்டேன் - என்
கண்களில் கண்ணீர் 
பெருக கண்டேன் 

உன்னை தின்ற
உயிர் சிதை
என்னுள் எரிகிறது
இன்னும் அணையாமல்

கருகி கரைந்த
குருதி சாம்பல்
உறுதி குலைத்து
உள்ளம் கலைக்கிறது

இருக்கிறாய் என்று
யாரும் சொல்வதில்லை
இல்லை என்பதை
இதயம் ஏற்பதில்லை

இருந்தும் இல்லாமல்
இருப்பவர்கள் கோடி
இல்லாமல் இருப்பவன்
என்றுமே நீதான்

ஐந்தில் நடப்பது
அறியாத துக்கம்
பத்தில் நடப்பது
புரியாத ஏக்கம்

இருபதில் இழப்பது
இளமையின் சோதனை
அறுபதில் இறப்பது
முதுமையின் வேதனை

சொத்துகள்  இருந்தும்
சுகம் இல்லை
சொந்தங்கள் இருந்தும்
சொர்க்கம் இல்லை

பணம் இருந்தும்
நிம்மதி இல்லை
குணம் இருந்தும் 
குதுகலம் இல்லை

மகனே  என்று
முறையிட்டு அழைக்க
தாய் மட்டும்
தனியாக இருக்கிறாள்

தந்தையே என்று
மனம்விட்டு  அழைக்க
நீவிட்டு சென்ற
நினைவுகள் மட்டும்

கனவுடன் வாழ்வதை
கண்கள் மறப்பதில்லை
நினைவுடன் நடப்பதை
நெஞ்சம் விடுவதில்லை

துணையுடன் கடப்பது
துணிச்சலான  வாழ்க்கை
துணையிழந்து தவிப்பது
இணையில்லாத துன்பம்

என்ன சொல்ல
ஆறும் காயம்
என்னை கொல்லும்
ஆறா வடு

உன்னை கண்ட
உள்ளம் எண்ணும்
கண்கள் மூடி
கனவில் வாழ !

Tuesday, July 5, 2011

எந்தையே - 25

உன்னால் 
உடைந்து போன 
என் தாய் 

உன்னையே 
உயிர் காத்த 
என் அன்னை 

ஒதுங்கி நிற்கிறாள்
தன்
உறுதி குலைந்து 

ஒடுங்கி விட்டாள் 
தன் 
உள்ளம் நொந்து 

உன்னை மட்டுமே 
நம்பி வந்தவள் 
சின்ன வயதில் 
தகப்பனை இழந்தவள் 

என்னென்ன துன்பங்கள் 
அனுபவித்தாள் 
என்பதை அறிந்தவன் 
எனக்கும் மேலாக 

அவள் வளையல்கள் 
உடைக்கப்பட்டன 
அவள் குங்குமம் 
அழிக்கப்பட்டது 

அவள் தாலி 
அறுக்கப்பட்டது 
நூல் சேலை 
கொடுக்கப்பட்டது
 
எந்த உலகம்
உன்னை 
ஒழித்து விட்டதோ 
அந்த உலகம் 
அன்னையை 
ஒதுக்கி விட்டது   

எந்த இலட்சியம் 
உங்களின்  
உயிர் மூச்சானதோ 
அந்த இலட்சியம் 
உயிர் 
மூச்சை விட்டது 
 
வெறும்
துரும்பாகி விட்டாள் 
இரும்பு 
மனதை இழந்து 

பெரும்
துயரம் அடைகிறாள்
ஓரம்
ஒதுங்கி சென்று

எந்த
நல்ல காரியமும் 
நடக்காதம்
அவள் தொடங்க

எந்த 
நல்ல நேரமும்
நெருங்காதம்
அவள் நடக்க  

வேறு
ஒரு நாதியும்
இல்லை
உங்களை தவிர

எங்களை வளர்க்க
இன்றும்
வேலை பார்க்க
செல்பவள் அவள்

உன்னை
இல்லாமல் செய்து
என்னை
ஏமாற்றிய உலகம்

அன்னையை
இருக்கச் செய்தும்
என்னை
ஏமாற்றப் பார்க்கிறது

என்
இன்பங்களை பகிர
அன்னைக்கும் தந்தைக்கும்
அறுகதை 
இல்லை என்று !

எந்தையே - 24

இருபத்தி எட்டு 
ஆண்டுகள் 
என்னையும் காத்து 
உன்னையும் காத்தாய்   

இப்போது 
ஏன் மறந்தாய் 
அப்போது போல் 
இருந்திட எண்ணாமல் 

இரண்டு ஐந்து
நாட்கள் 
என்னை இழந்து 
உன்னை காக்கவில்லை   

இப்படி 
ஒரு சோதனை 
எப்படி 
தரலாம் எனக்கு 

கல்லூரி 
முடித்தது முதல் 
காலச் சக்கரம் 
பின்னோக்கி நகர 

ஏங்கி
தவித்த நாட்கள் 
எவையும் 
எனக்காக அல்ல 

உன்  
தலை முடி 
நரை கண்ட 
என்மன தவிப்பது 

தமக்கையின் 
திருமணத்தில்
தடித்த 
கால் கண்டேன் 

முடியாமல் 
உன்னை 
நான் கண்ட 
முதல் முறையது

மனம் வருந்துவேன்
என்று  
மறைக்கப்பட்ட
பேருந்து விபத்துகள்

மறுமுறை நடக்காமல் 
இருக்க 
மன்றாட வைத்தது 
உன்னையும் தெய்வத்தையும்  

உதவிக்கு 
உறவுகள் இன்றி 
உபத்திரவத்திற்கு 
உற்றவர்கள் சேர
 
அருகில் இல்லாத 
இந்த மகன் 
ஆண்டவனைத் தான் 
நம்பி வணங்கினான்

வருத்தங்கள் 
குறையவில்லை  
உனக்கு வயோதிகம் 
வந்த பின்னும் 

பொறுப்புகள் 
வரவில்லை 
எனக்கு வாலிபம் 
பிறந்த பின்னும்            

சிறு வயதில்
நீரில் விழுந்து
ஒருமுறை
தேர்வு வைத்தேன்

பெரும் துன்பத்தில்
ஊரார்
தினம் தினம்
தேர்வு வைத்தனர்

வெற்றி பெற்றவன்
நீ
பெற்ற மக்களின்
உயிரை
பேணிக்  காப்பதில்

ஒரே முறை
தேர்வு வைத்தாய்
உடல் சோர்ந்து
உள்ளம் சோர்ந்து
     
மறந்து போனேன்
உனக்கு
ஊக்கம் தரும்
மருந்து கொடுக்க

இழந்து நிற்கிறேன்
இன்று
எந்தை இல்லாத
அநாதை என்று !

Friday, July 1, 2011

எந்தையே - 23

அமைதியான இரவில் 
ஆழ்ந்த உறக்கத்தில்  
நான் 
உன்னோடு இருப்பதாக 
ஒரு கனவு 

ஓய்வெடுக்கும் உடலில்
உறக்கமில்லா மனதில்
நீ
என்னோடு இருப்பதாக
ஒரு நினைவு  

நடந்து முடிந்த
நடக்க மறந்த 
இரண்டும் இணைந்த 
மாறுப்பட்ட நிகழ்வுகள் 

உடல் இல்லாத 
நீயும் 
உடல் உறங்கிய 
நானும் 

உருவம் பெற்று 
உலவுகிறோம் 
உறவுகள் கண்டு
குலாவுகிறோம்

அன்பு பாசம்
சண்டை சச்சரவு
அனைத்தும் நடக்கிறது
அன்றாட வாழ்க்கையாக

சிறு மூளை
பதிகிறது
புது நிகழ்வாக
அடி மனம்
சொல்கிறது
இதயம் தொட்டதாய்

உறக்கம்
கலைந்த பின்னும்
மறக்க
முடியாத கனவுகள்

உடல்
இல்லாமல் கூட
உயிர்
வாழும் நினைவுகள்

உடன் இருந்தவர்கள்
உண்மை என்று
உணர முடியாத
ஒரு கற்பனை

உலகில் இருப்பவர்கள்
உலகில் இல்லாதவர்கள் 
ஒருவரும்
பொறுப்பேற்காத சொப்பனம்  

ஒரு சில
மணித்துளிகளில்
கரைந்து போன 
ஒரு நாள்
இரண்டு நாள்    
காட்சிகள்

ஒரு
தூசு இல்லை
அலைந்த பின்னும்
ஒரு
தும்மல் இல்லை
நனைந்த பின்னும்

ஒரு
காயம் இல்லை
விழுந்த பின்னும்
ஒரு
கண்ணீர் இல்லை
எழுந்த பின்னும்  

நேற்று முடிந்த
இன்று தொடங்கிய
நாளை நடக்கவிருக்கும்
நினைவுகளுடன்

கலந்து போக
நினைக்கும்
கனவின் போராட்டம்
கனவாக போகிறது  

நீ மட்டும்
நிழலல்ல என்று
சொல்ல
நெஞ்சம் துடிக்கிறது !