Wednesday, August 24, 2011

சகோதரத்துவம்

நான் ஊமையாகி
எனக்குள் ஊனமாகி
நல்ல
பெயர் எடுக்க
எண்ணும் உள்ளங்கள்

உண்மை விரும்பியாகி
என்றும்  நேர்மையாகி
தனக்கு
இனியவனாக இருக்க
நினைக்கும்  உறவுகள்

உன்
வீட்டு வீதியை 
நான்
சத்தமில்லாமல்
கடக்க விரும்புகிறாய்

என் 
வீட்டு வாசலில்
நீ
சத்தம் போட்டு
நின்று செல்கிறாய்

உன்
கட்டளைகளை கேட்டு
நான்
அடி பணிந்து
நடக்க ஆசைப்படுகிறாய்

என்
கதறல்களை கண்டு
நீ
காது கேளாமல்
கடந்து போய்விடுகிறாய்

நான்
தலை குனிந்து
நடந்தால்
தம்பி என்கிறாய்

நான்
தலை நிமிர்ந்து
நடந்தால்
தறுதலை என்கிறாய்

நீ
பார்த்ததும்
நிற்க வேண்டும்
என்று
எதிர் பார்க்கிறாய்

உன்னை
பார்த்ததும்
பேச வேண்டும்
என்று
பழக சொல்கிறாய்

இருந்தும்
இல்லாமல் வாழும்
என்
இறுக்கமான வாழ்க்கை
பொருத்தமானது உனக்கு

என்றும்
நடை பிணமாய்
இருந்தால்
வருத்தம் கொடுக்காதவன்
நான் உனக்கு

என் வீட்டு
உணவு பொருட்கள்
நீ
வாங்கும் கடையில்
இருப்பது உண்மை

என் வரிசை
உனக்கு பின்னால் 
எப்போதும்
இருந்திட நினைப்பது
என்ன கொடுமை

உனக்கும் எனக்கும்
உயிர் வாழும்
காலம்
ஒன்று தான்

நீயும் நானும்
இருக்க வேண்டிய
உலகம்
ஒன்று தான்

உனக்காக
விட்டு கொடுக்கும்
தண்டனையாய்
எனக்கான
வயதை இழக்கிறேன்

உனக்காக
இடத்தை பறிக்கும்
பாதகமாய்
எனக்கான
உலகை மறுக்கிறாய்

இப்படி
ஒரு வாழ்க்கையில்
எப்படி
இணைந்தோம் இருவரும்

எப்படியும்
ஒரு தாயின்
வயிறு தான்
உலகத்தின் சூட்சமம்

அதுப்படி
அண்ணன் தம்பி
பிரிவு தான்
உறவுகளின்  ஆரம்பம்

என்றாவது
நினைத்து பார்த்ததுண்டா
என்னை
உன் சகோதரனாக

என்றுமே
எண்ணுவது என்ன
நான்
உனக்கு சகோதரனாகிட !


Wednesday, August 17, 2011

நயவஞ்சகம்

விழிகளில் வரும்
நடுக்கம்
வார்த்தைகளில் வரும் 
தடுமாற்றம்

புதிதாய் தோன்றும்
பாசம்
புதிராய் தோன்றும்
பழக்கம்

உணர முடிகிறது
ஒரு
உண்மை ஊமையாகி
கொண்டிருப்பதை

நினைவில் தெரிகிறது
ஒரு
செயற்கை தனம்
செயற்கரியதாய்

உயிர் வாழும்
போராட்டம்
உரிமை மீறலின்
நீரோட்டம்

உறவை தேடும்
உள்ளம்
தவறை மறைக்க
தஞ்சம்

கொஞ்சல்
அஞ்சி  அஞ்சி
கேட்கும்
அன்பு கெஞ்சல்

குழைவு
மிதம் மிஞ்சி
போகும்
பாவ மன்னிப்பு

முடியா தென்றால்
லஞ்சம்
முடியம் என்றால்
தண்டம்

கிடைக்கா தென்றால்
பொதுநலம்
கிடைக்கும் என்றால்
சுயநலம்

நீதி
நிறைய தடவை
செத்து போவது
சாமானியனின்
சகிப்புதனத்தில் தான்

நேர்மை
நேரத்திற்கு  நேரம்
சீர்கெட்டு போவது
ஏழையின் 
வாழ்க்கையில் தான்

சூன்யம்
வைக்க எண்ணும்
ஒரு
சூன்ய வாழ்க்கை

சாமிக்கு
சீட்டு கட்டும்
சில்லறை
சொந்தத்தின் சோகம்

விடியல்
வரவில்லை என்றால்
தடியெடுத்து
அடிக்கும் அபாயம்

புதையல்
கிடைக்கவில்லை என்றால்
பகைமையை
தோண்டும் பேராபத்து

மனிதன்
மிருகம் ஆகிறான்
மக்கள்
மாக்கள் ஆகின்றனர்

அறிவு
குறைபட்டு போனதால்
அன்பு
பிழைபட்டு போகிறது !

Sunday, August 7, 2011

உங்கள் விமர்சங்களுடன் நமது முதல் புத்தக படைப்பு

அன்பு நண்பர்களே

எனது இடைவிடாத வேலை பளு என் எழுத்து பணியில் சிறிது இடைவெளியை ஏற்ப்படுத்தி விட்டது . இப்போது எனக்கு ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால் என் தந்தைக்கு அறுபத்தியொரு கவிதைகள் எழுதி புத்தகமாக வெளியிட ஆசைப்பட்டேன்  . ஆனால் நேரம் குறைவாக இருப்பதால் அதன் எண்ணிக்கையை இருபத்தி எட்டாக குறைத்து விட்டு ( கண்ணீர் முத்துக்கள் 28 ) இதர தத்துவ கவிதைகளை இணைத்து ( கற்ற தத்துவங்கள் 61 ) கண்ணீர் அஞ்சலியுடன் ( அஞ்சலி 1 ) கட்டளைகள் பத்தாக ( கட்டளைகள் 10 ) என் முதல் தொகுப்பை வெளியிடும் வேலைகளை இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க நினைக்கிறேன் .

அதனால் உங்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் , நீங்கள் தான் எனது முதல் விமர்சகர்கள் , உங்களின் பங்களிப்பையும் நான் எதிர்பார்க்கிறேன் . என்னால் முடியும் என்றால் உங்கள் அன்பு கரங்களின் ரேகை அச்சுகளையாவது என் புத்தகத்தில் வெளியிட விரும்புகிறேன். அதற்கு

1. உங்களுக்கு பிடித்த என் கவிதைகளை வரிசைப்படுத்தி உங்கள் கருத்துகளை, வாழ்க்கை நினைவுகளுடனான என் கவிதை தாக்கங்களை எனக்கு எழுதி அனுப்புங்கள். நம் அழகு தமிழில் மட்டும் எழுதி அனுப்புங்கள். ரத்தின சுருக்கமாக எழுதி அனுப்புங்கள் . தேர்ந்தேடுத்தப் பின் உங்கள் அனுமதி பெற விரும்புகிறேன் புத்தகத்தில் வெளியிடுவதற்கு.

2. என் கவிதைகளுக்கான கருத்துகள் நிறைந்த புகைப்படங்கள் உங்களிடம் இருக்கும் என்றால் அதைபற்றிய வில்லங்கம் இல்லாத (copy write issue ) விளக்கங்களுடன் எனக்கு அனுப்புங்கள் . எந்த கவிதைக்கான புகைப்படம் என்பதை குறிப்பிட்டு அனுப்புங்கள். தேர்ந்தேடுத்தப் பின் உங்கள் அனுமதி பெற விரும்புகிறேன் புத்தகத்தில் வெளியிடுவதற்கு.

எனது email address: visvatamil@gmail.com

உங்கள் அனைத்து எண்ணங்களையும் எனக்கு மேலே குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்புகள் . எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் உங்கள் இனிய நண்பன்.

Saturday, August 6, 2011

சிறை பறவை

சிறைப்பட்டு கிடக்கும்
என்
சட்ட விரோத
சாமானிய சிந்தனைகள்

அடைப்பட்டு கிடக்கும்
என்
அறிவுக்கு புறம்பான
ஆசைக் கனவுகள்

சந்தர்ப்ப சூழல்களில்
சத்தமின்றி
தலை காட்டும்
தவறான எண்ணங்கள்

சம்மதம் கிடைத்தால்
சத்தியமாக
மொத்தமாய் மூழ்கடிக்கும்
மூர்க்கக் குணங்கள்

புரையோடிய புண்கள்
ஆறாத வடுக்கள்
என்
உடலின் பலவீனம்
உள்ளத்தின் சுகவீனம்

தத்திதத்தி நடக்கிறேன்
தவறெது சரியெது
என்ற
சந்தேகம் கொண்டு

தடுமாறி விழுகிறேன்
தடவி எழுகிறேன்
நடை
பாதை பழக்கமின்றி

ஆசைக்கும் பேராசைக்கும்
அடமானம் வைக்கிறேன்
என்
அறிவையும் தெரிவையும்

நன்மையும் தெரியும்
உண்மையும் தெரியும்
நம்பிக்கை நாணயம்
நன்றாக தெரியும்

கணநேர நினைவுகள்
என் கனவுகள்
அழிக்கும் அவலம்
அனைத்தும் அறிவேன்

விடுதலை புதிர்
விடுபடாத புதர்
காடாய் தெரியும்
கேடின் சிறை

சிறைக் கம்பிகளுக்கு
இடையே
அறையப்பட்டு நிற்கும்
குற்றவாளி கைதி

காவல் அதிகாரியாய்
கவனித்து கொண்டு
இருக்கும்
கம்பிகளின் மறுபக்கம்

இருபுறமும் தெரிகிறேன்
ஒரே உருவத்தின்
வெவ்வேறு பிம்பங்களில்
மாறுபட்ட மனிதனாய்

யாரிடம் உள்ளது
பூட்டை திறக்கும்
சாவி
புரியவில்லை எனக்கு

பொறுமை கடந்தால்
பூட்டிய கதவுகள்
உடைக்கப் படுமா
விடையில்லை இன்னும்

எல்லை மீறி
எல்லாம் முடிந்ததும்
எண்ணிப் பார்த்து
திகைக்கிறேன்

எப்போது பறந்தது
என்
சிறைப்பறவை
சட்டத்தை உடைக்க

மீண்டும் அடைத்து
விட்டு
விழித்து நிற்கிறேன்
என்று பறக்குமென்று !