Friday, July 1, 2011

எந்தையே - 23

அமைதியான இரவில் 
ஆழ்ந்த உறக்கத்தில்  
நான் 
உன்னோடு இருப்பதாக 
ஒரு கனவு 

ஓய்வெடுக்கும் உடலில்
உறக்கமில்லா மனதில்
நீ
என்னோடு இருப்பதாக
ஒரு நினைவு  

நடந்து முடிந்த
நடக்க மறந்த 
இரண்டும் இணைந்த 
மாறுப்பட்ட நிகழ்வுகள் 

உடல் இல்லாத 
நீயும் 
உடல் உறங்கிய 
நானும் 

உருவம் பெற்று 
உலவுகிறோம் 
உறவுகள் கண்டு
குலாவுகிறோம்

அன்பு பாசம்
சண்டை சச்சரவு
அனைத்தும் நடக்கிறது
அன்றாட வாழ்க்கையாக

சிறு மூளை
பதிகிறது
புது நிகழ்வாக
அடி மனம்
சொல்கிறது
இதயம் தொட்டதாய்

உறக்கம்
கலைந்த பின்னும்
மறக்க
முடியாத கனவுகள்

உடல்
இல்லாமல் கூட
உயிர்
வாழும் நினைவுகள்

உடன் இருந்தவர்கள்
உண்மை என்று
உணர முடியாத
ஒரு கற்பனை

உலகில் இருப்பவர்கள்
உலகில் இல்லாதவர்கள் 
ஒருவரும்
பொறுப்பேற்காத சொப்பனம்  

ஒரு சில
மணித்துளிகளில்
கரைந்து போன 
ஒரு நாள்
இரண்டு நாள்    
காட்சிகள்

ஒரு
தூசு இல்லை
அலைந்த பின்னும்
ஒரு
தும்மல் இல்லை
நனைந்த பின்னும்

ஒரு
காயம் இல்லை
விழுந்த பின்னும்
ஒரு
கண்ணீர் இல்லை
எழுந்த பின்னும்  

நேற்று முடிந்த
இன்று தொடங்கிய
நாளை நடக்கவிருக்கும்
நினைவுகளுடன்

கலந்து போக
நினைக்கும்
கனவின் போராட்டம்
கனவாக போகிறது  

நீ மட்டும்
நிழலல்ல என்று
சொல்ல
நெஞ்சம் துடிக்கிறது !


No comments:

Post a Comment