Tuesday, June 28, 2011

எந்தையே - 22

விலை உயர்ந்த 
காலணியை
விட்டு பிரிந்த 
வெயில் காலம்

பொட்டல் வெளியில்
நடந்து சென்றால்
பொடி சுடாமலிருக்க
அன்னை கொடுத்தாள்

தந்தையின் காலனி
எந்த சேதமும்
இல்லாமல்
எடுத்துவா என்று 

கற்களை கடந்தேன் 
முற்களில் நடந்தேன்
உச்சி வெயிலும்
ஒன்றும் செய்யவில்லை 

உழைத்து உழைத்து
ஓடாகி
உறுதி குலைந்த
இறுதி காலத்திலும்

உன்னை போல்
என்னை காத்திட
நினைக்கும்
உன்னுடைய செருப்பு

அனுமதி இன்றி
பண்டம் மாற்றினாய்
என்
அறுந்த காலனியை

சிறந்ததொரு
புது காலனியை
தேர்வு செய்து
தந்து விட்டு

ஒரு முறைக்கு
இரு முறை
ஒட்டு போட்டு
அணிந்து கொண்டாய்

ஒவ்வொரு முறை
காலணி மாற்றம் 
நிகழ்ந்த பொழுதும்  
உள்ளம் நெகிழ்ந்தேன்
  
என்னை
செருப்புக்காக அல்ல
உன்
சிறப்புக்காக பெற்றதால்

என்
வருமானத்திற்கு பின்
உன்
அடி வருடினேன்

உன்னால்
புனர் வாழ்வு
பெற்ற
அறுந்த செருப்புகளால்

இடம் கொடுத்து
உடன்
வைத்து கொண்ட
ஒருவன்

தந்தை அன்பில்
வந்து பார்த்த
உன்னை
தரம் தாழ்த்தி  

புத்தி கெட்டு
உளறியதில்
புண் பட்டு 
பிரிந்து சென்றாய்

அடிக்கடி வந்து
உன்
அடி வருடும்
அனுமதி தராததால்

என்
அறுந்து போன
செருப்புகள்
சோர்ந்து கிடந்தன   

விரக்தி நாட்கள்
வழங்கிய
விலை குறைந்த 
செருப்பு


இறுதி நாட்களில்
உன்னை
ஏந்தி செல்லும்
பெருமை பெற்றது  

ஆறு மணிநேர
இடைவெளி
அரை மணிநேர
நடைபயணம்

உன் செருப்பை
நான் அணியும்
சிறப்பை 
பெற்று தந்தது

இராமனின் காலணி
பரதனின்
தலையை அலங்கரித்தது
புராணம்

தந்தையின் காலணி
மகனின்
காலை அலங்கரிப்பது
கிரீடம் !

No comments:

Post a Comment