முகவரி தொலைந்து
நிற்கிறேன் - உன்
முக வடிவம்
இழந்து தவிக்கிறேன்
கனவுகள் கருக
கண்டேன் - என்
கண்களில் கண்ணீர்
பெருக கண்டேன்
உன்னை தின்ற
உயிர் சிதை
என்னுள் எரிகிறது
இன்னும் அணையாமல்
கருகி கரைந்த
குருதி சாம்பல்
உறுதி குலைத்து
உள்ளம் கலைக்கிறது
இருக்கிறாய் என்று
யாரும் சொல்வதில்லை
இல்லை என்பதை
இதயம் ஏற்பதில்லை
இருந்தும் இல்லாமல்
இருப்பவர்கள் கோடி
இல்லாமல் இருப்பவன்
என்றுமே நீதான்
ஐந்தில் நடப்பது
அறியாத துக்கம்
பத்தில் நடப்பது
புரியாத ஏக்கம்
இருபதில் இழப்பது
இளமையின் சோதனை
அறுபதில் இறப்பது
முதுமையின் வேதனை
சொத்துகள் இருந்தும்
சுகம் இல்லை
சொந்தங்கள் இருந்தும்
சொர்க்கம் இல்லை
பணம் இருந்தும்
நிம்மதி இல்லை
குணம் இருந்தும்
குதுகலம் இல்லை
மகனே என்று
முறையிட்டு அழைக்க
தாய் மட்டும்
தனியாக இருக்கிறாள்
தந்தையே என்று
மனம்விட்டு அழைக்க
நீவிட்டு சென்ற
நினைவுகள் மட்டும்
கனவுடன் வாழ்வதை
கண்கள் மறப்பதில்லை
நினைவுடன் நடப்பதை
நெஞ்சம் விடுவதில்லை
துணையுடன் கடப்பது
துணிச்சலான வாழ்க்கை
துணையிழந்து தவிப்பது
இணையில்லாத துன்பம்
என்ன சொல்ல
ஆறும் காயம்
என்னை கொல்லும்
ஆறா வடு
உன்னை கண்ட
உள்ளம் எண்ணும்
கண்கள் மூடி
கனவில் வாழ !
No comments:
Post a Comment