அழுகை தான்
நான்
உலகில் பேசிய
முதல் மொழி
அன்னையின் மடியில்
அடம் பிடித்தேன்
கண்ணீரை கொண்டு
காரியம் சாதித்தேன்
தந்தையின் பிடியில்
தஞ்சம் அடைந்தேன்
கண்களை கசக்கி
தட்சணை பெற்றேன்
குருவின் கோபத்தில்
குறுகி நின்றேன்
அச்சத்தில் அழுது
ஆறுதல் பெற்றேன்
ஆண்டவன் ஆலயத்தில்
அர்ச்சனை செய்தேன்
அழுது அழுது
அருள்பாலிக்க சொன்னேன்
இளைஞன் ஆனதால்
எனக்கு நானே
அழுது கொண்டேன்
இருந்தும்காதல் கொண்டதால்
கண்கள் குளமாகின
செய்யும்
தொழில் சிறக்க
அழுததுண்டு
தொழிலில்
பணம் பெருக
கண்ணீர் விட்டதுண்டு
பிள்ளைகளுக்காக
அழுதேன் - அவர்களை
பெரியவர்கள் ஆக்க
அழுதேன்
தொல்லைகளுக்காக
அழுதேன் - அவைகளை
தொலைத்து கட்ட
அழுதேன்
ஓய்வு
பெற்றப் பின்னும்
அழுதேன்
ஓயாத பசிக்காக
ஒருவாய்
உண்டப் பின்னும்
அழுதேன்
ஊசலாடும் உயிருக்காக
இறுதியாக அழுதேன்
இறந்த பின்
சுற்றி நின்றவர்கள்
கண்களின் வழியாக
இன்னமும் அழுகிறேன்
எஞ்சி நிற்கும்
என் நினைவுகளின்
கனவுகள் அழியாமல் !
No comments:
Post a Comment