Sunday, May 8, 2011

இரவின் உறவு

நான் 
உன்னை பார்க்கையில் 
முழு நிலவாய் 
இருந்தேன் 

நீ 
என்னை பார்த்ததும் 
பிறை நிலவாய் 
தேய்கிறேன்

என் 
வானம் நீ 
உன் 
இரவில் நான்

விண்மீன் பூக்கள்
வானளாவிய
வாடா
மலர் அலங்காரம்

வீசி எறிந்த
தலையணைகள்
போல்
மேக கூட்டங்கள்   

வெளிச்சம் மிக்க
ஒரே விளக்கு
நான் மட்டுமே
உன் அறையில்

வெட்கம் மிகுந்த
ஒரே இருட்டில்
நீ மட்டும்
என் பிடியில்

என்
முகத்தின் ஓரத்தில்
உன் விரல்கள்
நாண ரேகைகளோடு

நளினமாய்
ஒரு
நடை நடந்தேன்

கிழக்கு
உச்சி முதல்
மேற்கு
பாதம் வரை      

என்
ஒளிக் கரங்களில்
ஒரு
வலை போட்டேன்

உன்னை
வாரி அணைத்து
ஆரமாய்
தழுவிக் கொண்டேன்

நம்
சதுரங்க ஆட்டத்தில்
சில
நட்சத்திரங்கள்
இடம் மாறின

பெரிய பெரிய
தடங்களைப் போல்
நாம்
எச்சிலில்
ஈரப் படுத்தினோம்    

மேகத் தலையணையில்
முகம் பதித்து
மோக விளையாட்டை
மிகைப் படுத்தினோம்

தவறிய முத்துக்கள்
தரையில் சிந்தி
காலை
பனித்துளியாய்
கண் சிமிட்டின
  
ஒவ்வொரு நாளும்
உருக்குலைந்தேன்
ஒருசில நாளில்
உனக்குள் நுழைந்தேன்

நான் என்பதை
நானாக கலைந்தேன்
நீ என்பதில்
தானாக மறைந்தேன்

அமாவாசை இரவில்
நாம்
நம் ஆக்கிரமிப்பை
இடம்
மாற்றிக் கொண்டோம்

அடுத்தடுத்த
இரு நாட்களில்
அந்தரத்தில்
விடப்பட்டது
நட்சத்திர பந்தல்

வளர்பிறையில்
எழுகின்றேன்
வாரி
சுருட்டிக்கொண்டு   

மீண்டும்
ஒரு
தேய்பிறையில்
தேய்ந்து போக !

 

No comments:

Post a Comment