Sunday, May 22, 2011

எந்தையே -14

இலக்கு இல்லாமல் 
தவிக்கிறது 
இந்த ஏவுகணை 

இதை 
எய்திட வேண்டியவன் 
இறந்து போனதால் 

தானியங்கி தான் 
என்றாலும் 
தான் இயங்கும் 
காலம் எது 

நானியங்கி தான் 
என்றாலும் 
நான் இயங்கும் 
களம் எது 

உன் போராட்ட 
வாழ்வில் 
புண்பட்டு விழுந்தாய்  
ஊரார் 
கண்பட்டு வீழ்ந்தாய்
 
உன் போர்களத்தில் 
தீட்டப்பட்ட 
கூர்வாள் நான் 

நன் மதிப்பில் 
நவீனப் 
படுத்தப்பட்ட  
வன்கணை நான் 

இதன் 
செயல் வடிவங்களின் 
சிற்பி நீ
 
என் 
செயலிகளின் 
சிற்பம் நீ 

உன் 
சொற்ப பொருட்களில் 
உருவாக்கப்பட்ட 
அற்பன் நான் 

என் 
அற்ப குறிகளில் 
அகப்பட்ட 
சொற்ப உலகமிது 

அழுகை 
அடங்கிக் கொண்டு 
வருகிறது 

ஆத்திரம் 
தொடங்கிக் கொண்டு 
வருகிறது 

எதிரிகள் 
என்னை சுற்றி 
வருகிறார்கள் 

எதிர்ப்புகள் 
என்னை பற்ற 
வருகிறது 

சரியான உதவும் 
கருவிகள் 
பொருத்தப் படாததால்

விரைவாக 
நிறைவேற்ற முடியாமல் 
உன் கட்டளைகள் 

நல்லவர்கள் 
கெட்டவர்கள்
நண்பர்கள் 
எதிரிகள் 

எல்லோரின் 
எதிர்பார்ப்பும் 
இது தான் 

இந்த 
ஏவுகணை 
என்ன செய்யும் 

இந்த நேரத்தில் 
என் 
உறுதிமொழி 
ஒன்று தான் 

இது ஒரு 
தானியங்கி எந்திரமாக 
உருவாக்கப் பட்டுள்ளது 

எய்தவனின் 
இறக்கும் கால 
இயற்கையையும் 
கருத்தில் கொண்டு ! 
      

No comments:

Post a Comment